குஷாக் எஸ்யூவியின் மேட் எடிஷன் மாடலை வெளியிட்டது ஸ்கோடா
இந்தியாவில் தங்களது குஷாக் எஸ்யூவியின் மேட் எடிஷனை வெளியிட்டிருக்கிறது ஸ்கோடா நிறுவனம். குஷாக் மாடலை சந்தையில் அறிமுகப்படுத்தி விரைவில் இரண்டு ஆண்டுகள் நிறைவடையவிருப்பதை அடுத்து இந்த குஷாக் மேட் எடிஷனை வெளியிட்டிருக்கிறது ஸ்கோடா. ஏற்கனவே விற்பனையில் இருக்கும் குஷாக்கின் மான்டே கார்லோ மற்றும் ஸ்டைல் வேரியன்ட்களுக்கு இடையில் இந்த மேட் எடிஷனை நிலை நிறுத்தியிருக்கிறது ஸ்கோடா. புதிய பெயிண்ட் ஸ்கீம் மற்றும் சின்னச் சின்ன கூடுதல் டிசைன் மாற்றத்தைப் பெற்றிருக்கும் குஷாக் மேட் எடிஷனில் 500 கார்களை மட்டுமே தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம். சாதாரண வேரியன்ட்டை விட ரூ.40,000 கூடுதல் விலையில் இந்த மேட் எடிஷன் குஷாக்கை வெளியிட்டிருக்கிறது ஸ்கோடா.
ஸ்கோடா குஷாக் மேட் எடிஷன்: என்னென்ன மாற்றங்கள்?
இந்த குஷாக் மேட் எடிஷனின் வெளிப்புறத்தில் கார்பன் ஸ்டீல் பெயிண்ட் ஸ்கீமினாது மேட் ஃபினிஷில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இத்துடன் டோர் ஹேண்டில்கள் மற்றும் விங் மிரர்களில் க்ளாஸியான பிளாக் ட்ரிம்மும், கிரில் உள்ளிட்ட சில இடங்களில் க்ரோம் ஃபினிஷும் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேற்கூறிய கலர் மாற்றங்களைத் தவிர வேறு புதிய மாற்றங்கள் எதுவும் இந்த குஷாக் மேட் எடிஷனில் செய்யப்படவில்லை. குஷாக்கின் 1.0 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் ஆகிய இரண்டு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களையும் இந்த மேட் எடிஷனில் பெற்றுக் கொள்ளமுடியும். கூடுதலாக, மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களையும் மேட் எடிஷனில் அளித்திருக்கிறது ஸ்கோடா. இந்தியாவில் டைகூன், டெல்டோஸ், க்ரெட்டா, ஹைரைடர் மற்றும் எலிவேட் ஆகிய மாடல்களுக்குப் போட்டியாக விற்பனையாகி வருகிறது குஷாக்.