விலை குறைவான 'டாட் ஒன்' எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்டது சிம்பிள் எனர்ஜி
இந்தியாவில் அனைவரும் வாங்கக்கூடிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக 'டாட் ஒன்' (Dot One) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை வெளியிட்டிருக்கிறது பெங்களூருவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சிம்பிள் எனர்ஜி. முன்னதாக ரூ.1.45 லட்சம் முதல் 1.50 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் சிம்பிள் ஒன் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்தியாவில் விற்பனை செய்து வந்தது அந்நிறுவனம். அதனைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் இரண்டாவது மாடலாக தற்போது இந்த சிம்பிள் ஒன் டாட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியாகியிருக்கிறது. தற்போது பெங்களூருவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே விற்பனை செய்யப்படவிருக்கிறது இந்தப் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர். நான்கு சிங்கிள்-டோன் மற்றும் இரண்டு டூயல்-டோன் என மொத்தம் ஆறு நிறத் தேர்வுகளில் இந்தப் புதிய ஸ்கூட்டர் விற்பனை செய்யப்படவிருக்கிறது.
சிம்பிள் எனர்ஜி டாட் ஒன்: வசதிகள் மற்றும் விலை
8.5kW பவரை வெளிப்படுத்தக்கூடிய எலெக்ட்ரிக் மோட்டாரைப் பெற்றிருக்கும் இந்த டாட் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், 3.7kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த பேட்டரி பேக்குடன் சிங்கிள் சார்ஜில் 151 கிமீ வரையிலான ரேஞ்சைக் கொடுக்கிறது இந்த டாட் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர். அதிகபட்சம் மணிக்கு 105 கிமீ வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டிருக்கும் இந்த ஸ்கூட்டரானது, 2.8 நொடிகளில் 40 கிமீ வேகத்தை எட்டுகிறது. பெங்களூருவில் உள்ள சிம்பிள் எனர்ஜி வாடிக்கையாளர்களுக்கு ரூ.99,999 எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தப் புதிய டாட் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியிருக்கிறது சிம்பிள் எனர்ஜி. பிற நகர வாடிக்கையாளர்களுக்கான விலைகளை அடுத்த மாதம் அந்நிறுவனம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.