ரூ.10 லட்சம் விலைக்குள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட செடான்கள்
கார் வாடிக்கையாளர்களிடையே மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட கார்களே ஆஸ்தான தேர்வாக இருந்தாலும், நகரங்களிலும் நெரிசல் மிகுந்த இடங்களிலும் சிரமமில்லாத ஓட்டுதல் அனுபவத்தை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட கார்களே வழங்குகின்றன. இந்தியாவில் பலரும் மேனுவல் கியர்பாக்ஸை விரும்புவதற்கு, அதன் விலையும் ஒரு காரணமாக அமைந்து விடுகிறது. பெரும்பாலும், பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது அடிப்படை மற்றும் விலை குறைவான மாடல்களில் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுகளை மட்டுமே அளிக்கின்றன. குறிப்பிட்ட சில மாடல்களில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் அளிக்கப்பட்டாலும், அவற்றின் விலையோ சில பல லட்சங்கள் கூடுதலாகவே இருக்கிறது. சரி, இந்தியாவில் ரூ.10 லட்சம் விலைக்குள் விற்பனையில் இருக்கும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொண்ட செடான்கள் என்னென்ன? பார்க்கலாம்.
டாடா டிகோர்:
டாடாவின் ஒரேயொரு செடான் மாடலான டிகோர், 5-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுடன் விற்பனையாகி வருகிறது. மேலும், டிகோரின் XMA மற்றும் XZA+ ட்ரிம்களில் மட்டும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வினை அளித்திருக்கிறது டாடா. 86hp பவர் மற்றும் 113Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய, மூன்று சிலிண்டர்களைக் கொண்ட, 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன், பல்வேறு மேம்படுத்தப்பட்ட வசதிகளையும் கொண்டிருக்கிறது இந்த டாடா டிகோர். இந்தியாவில் ரூ.7.45 லட்சம் முதல் ரூ.8.50 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலைகளில் விற்பனையாகி வருகிறது டாடா டிகோரின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட வேரியன்ட்கள்.
மாருதி சுஸூகி டிசையர்:
இந்தியாவில் கார் வாடிக்கையாளர்கள் மற்றும் செடான் வாடிக்கையாளர்களால் அதிகம் விரும்பப்படும் மாடல்களுள் ஒன்று இந்த மாருதி சுஸூகி டிசையர். இந்த டிசையர் மாடலின் VXi, ZXi மற்றும் ZXi+ ஆகிய வேரியன்ட்களில் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வை அளித்திருக்கிறது மாருதி சுஸூகி. 90hp பவர் மற்றும் 113Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய, நான்கு சிலிண்டர்கள் கொண்ட, 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினைக் கொண்டிருக்கிறது இந்த மாருதி டிசையர் மாடல். இந்தியாவில் ரூ.7.99 லட்சம் முதல் ரூ.9.39 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலைகளில் இந்த டிசையர் மாடலின் ஆட்டோமேட்டிக் வேரியன்ட்களை விற்பனை செய்து வருகிறது மாருதி சுஸூகி.
ஹோண்டா அமேஸ்:
பத்து லட்சம் ரூபாய் விலைக்குள் CVT கியர்பாக்ஸூடன் விற்பனை செய்யப்பட்டு வரும் ஒரே மாடல் இந்த ஹோண்டா அமேஸ் தான். அமேஸ் மாடலின் மிட் ஸ்பெக் S வேரியன்ட் மற்றும் டாப் ஸ்பெக் VX வேரியன்ட்களில் 7-ஸ்டெப் CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை வழங்கியிருக்கிறது ஹோண்டா. மேலும், இந்த அமேஸில் 90hp பவர் மற்றும் 110Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய, நான்கு சிலிண்டர்கள் கொண்ட, 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினைக் கொடுத்திருக்கிறது ஹோண்டா. இந்தியாவில் ரூ.8.67 லட்சம் முதல் ரூ.9.71 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலைகளில் விற்பனையாகி வருகிறது ஹோண்டா அமேஸின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட வேரியன்ட்கள்.
ஹூண்டாய் ஆரா:
தங்களுடைய ஆரா செடானின் மிட் ஸ்பெக் SX+ வேரியன்டில் மட்டுமே 5-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வை வழங்கியிருக்கிறது ஹூண்டாய். சொகுசாக இடவசதிமிக்க கார் என ஆராவைக் கூற முடியாவிட்டாலும், வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய காராகவே இருந்து வருகிறது. இந்த ஆராவில் 83hp பவர் மற்றும் 114Nm டார்க்கை உற்பத்தி செய்யக்கூடிய, நான்கு சிலிண்டர்கள் கொண்ட, 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினைப் பயன்படுத்தியிருக்கிறது ஹூண்டாய். இந்தியாவில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட ஹூண்டாய் ஆராவின் ஒரேயொரு வேரியன்டானது ரூ.8.75 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.