விழாக்காலத்தை முன்னிட்டு சலுகைகளுடன் செடான் மாடல்களை விற்பனை செய்து வரும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் ஆட்டோமொபைல் வாடிக்கையாளர்கள் ஆஸ்தான செக்மண்டாக ஒரு காலத்தில் இருந்தது செடான் செக்மண்ட். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக வாடிக்கையாளர்களின் கவனம் முழுவதும் செடானில் இருந்து எஸ்யூவிக்கள் பக்கமே திரும்பியிருக்கிறது.
இதனால், முன்பு ராஜாவாக இருந்த செடான் செக்மண்டில் கார்களின் விற்பனை சற்று தளர்வடைந்திருக்கிறது. எனவே, பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தங்களுடைய செடான் மாடல்களுக்கு தள்ளுபடிகளையும், சலுகைகளையும் அறிவித்து வருகின்றன.
முக்கியமாக இந்த விழாக்காலத்தை முன்னிட்டு பல்வேறு நிறுவனங்களும் செடான்களுக்கான தள்ளுபடி மற்றும் சலுகை அறிவிப்புகளை வெளியிட்டிருக்கின்றன. எந்தெந்த செடான் மாடல்களுக்கு எவ்வளவு தள்ளுபடி மற்றும் சலுகை அறிவிக்கப்பட்டிருக்கிறது?
செடான்
சலுகை வழங்கப்பட்டிருக்கும் செடான் மாடல்கள்:
ஹோண்டா நிறுவனமானது தங்களுடைய அமேஸ் மாடலுக்கு ரூ.57,000 வரையிலான சலுகைகளும், ஐந்தாம் தலைமுறை சிட்டி மாடலுக்கு ரூ.1 லட்சம் வரையிலான சலுகைகளையும் வழங்கியிருக்கிறது.
டாடா டிகோர் மாடலானது ரூ.50,000 வரையிலான சலுகையுடன் டீலர்ஷிப்களில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாருதி சுஸூகி நிறுவனமானது தங்களுடைய சியாஸ் மாடலை ரூ.43,000 சலுகையுடன் விற்பனை செய்து வருகிறது.
இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் ஸ்கோடா ஸ்லாவியாவுக்கு ரூ.1.5 லட்சம் வரையிலான சலுகையும், ஃபோக்ஸ்வாகன் விர்ட்டஸ் மாடலுக்கு ரூ.1 லட்சம் வரையிலான சலுகையும் அளிக்கப்பட்டிருக்கிறது.
மேற்கூறிய சலுகைகளில் குறிப்பிட்ட மாடலின் இருப்பு மற்றும் வாடிக்கையாளர்கள் இடம்பெற்றிருக்கும் நகரம் உள்ளிட்டவற்றுக்கு ஏற்ப மாற்றங்கள் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.