இந்தியாவில் அதிகரித்து வரும் ஸ்கூட்டர் விற்பனை
இந்தியாவில் தொடர்ச்சியாக நான்காவது மாதமாக ஸ்கூட்டர் விற்பனை 5 லட்சத்தைக் கடந்திருக்கிறது. இந்த ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவில் ஸ்கூட்டர் விற்பனை 39.64 லட்சத்தை எட்டியிருக்கிறது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 7% அதிகமாகும். மேலும், நவம்பர் மாதத்தில் விற்பனையான மொத்த இரு சக்கர வாகனங்களில் 31.36% பங்கை ஸ்கூட்டர்களே ஆக்கிரமித்திருக்கிறது. இது கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது 23% அதிகமாகும். தொடர்ச்சியாக இந்தியாவில் ஸ்கூட்டர் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருவதாக SIAM (Society of Indian Automobile Manufacturers) வெளியிட்ட தகவல்கள் மூலம் தெரிய வருகிறது.
முன்னணியில் இருக்கும் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனங்கள்:
SIAM அமைப்பில் பதிவு செய்திருக்கும் 10 ஸ்கூட்டர் தயாரிப்பாளர்களில் ஐந்து நிறுவனங்களே, இந்தியாவின் 96% ஸ்கூட்டர் விற்பனையை தங்கள் கைவசம் வைத்திருக்கின்றன. முக்கியமாக, ஹோண்டா, டிவிஎஸ் மோட்டார் கம்பெனி மற்றும் சுஸூகி ஆகிய மூன்று நிறுவங்களே 84% ஸ்கூட்டர் விற்பனையைக் கொண்டு இந்திய ஸ்கூட்டர் சந்தையை தங்கள் கைவசம் வைத்திருக்கின்றன. இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் முன்னணியில் இருக்கிறது ஓலா நிறுவனம். இந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை 2.36 லட்சம் ஸ்கூட்டர்களை விற்பனை செய்திருக்கிறது ஓலா. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த அளவு 2.50 லட்சத்தைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.