டக்கார் ராலி மோட்டார் ஸ்போர்ட்ஸ் 2026: இந்திய வீரர் சஞ்சய் தகாலே முதலிடம் பிடித்து அசத்தல்
செய்தி முன்னோட்டம்
சவுதி அரேபியாவில் நடைபெற்று வரும் உலகின் மிகக் கடினமான மோட்டார் ஸ்போர்ட்ஸ் போட்டியான டக்கார் ராலி 2026 இல் இந்திய வீரர் சஞ்சய் தகாலே வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். போட்டியின் ஆரம்பக் கட்டமான புரோலாக் சுற்றில், கார் பிரிவில் பங்கேற்ற சஞ்சய் தகாலே அதிக சராசரி வேகம் கொண்ட குரூப் H3 பிரிவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். கார் பிரிவின் ஒட்டுமொத்தப் பட்டியலில் 35வது இடத்தைப் பிடித்துள்ளார். டக்கார் ராலியின் கார் பிரிவில், முதல் நாளிலேயே மேடையில் ஏறிய முதல் இந்தியர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
வாகனம்
வாகனம் மற்றும் பாதை
சஞ்சய் தகாலே Aerpace Racers அணிக்காக டொயோட்டா HDJ 100 காரை ஓட்டுகிறார். இவருக்கு பிரெஞ்சு நேவிகேட்டர் மேக்சிம் ராட் உதவி செய்கிறார். 22 கிமீ சிறப்புப் பாதை மற்றும் 74 கிமீ இணைப்புப் பாதை என மொத்தம் 96 கிமீ தூரத்தைப் புரோலாக் சுற்றில் வெற்றிகரமாகக் கடந்தார். புனேவைச் சேர்ந்த 57 வயதான சஞ்சய் தகாலேவுக்கு இது இரண்டாவது டக்கார் ராலி பயணமாகும். கடந்த 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் இவர் ஒட்டுமொத்தமாக 18 வது இடத்தையும், தனது பிரிவில் 10 வது இடத்தையும் பிடித்து, டக்கார் ராலியை நிறைவு செய்த முதல் இந்திய கார் வீரர் என்ற சாதனையைப் படைத்திருந்தார்.
அடுத்த கட்டம்
போட்டியின் அடுத்த கட்டம்
புரோலாக் சுற்றில் வெற்றி பெற்றதன் மூலம், யான்புவில் தொடங்கும் முதல் கட்டப் போட்டியில் முன்னணியில் இருந்து பாதையைத் தொடங்கும் வாய்ப்பை இவர் பெற்றுள்ளார். 305 கிமீ நீளம் கொண்ட இந்தப் பாதை மணல் திட்டுகள் மற்றும் கடினமான வழிசெலுத்தல் சவால்களைக் கொண்டது.