இந்தியாவில் புதிய 440சிசி பைக்கை வெளியிடத் திட்டமிட்டு வரும் ராயல் என்ஃபீல்டு
இந்தியாவில் 411சிசி இன்ஜினைக் கொண்ட ஸ்கிராம் 411 பைக் மாடலை விற்பனை செய்து வருகிறது ராயல் என்ஃபீல்டு. இந்நிலையில், 440சிசி இன்ஜினைக் கொண்ட புதிய ஸ்கிராம் பைக் ஒன்றை அந்நிறுவனம் வெளியிடவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தியாவில் தங்களது முதல் பைக்காக, 440சிசி இன்ஜின் கொண்ட X440 பைக்கை குறைந்த விலையில் வெளியிட்டிருந்தது அமெரிக்க பைக் தயாரிப்பு நிறுவனமான ஹார்லி டேவிட்சன். இந்தியாவில் தங்களுக்குப் போட்டியாக புதிய பைக்கை களமிறக்கிய ஹார்லி டேவிட்சனின் புதிய பைக் மாடலுக்குப் போட்டியாகவே 440சிசி இன்ஜின் கொண்ட பைக் மாடலை ராயல் என்ஃபீல்டு தயாரிக்க திட்டமிட்டிருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த புதிய 440சிசி பைக்கை அடுத்த 12 மாதத்திற்குள் இந்தியாவில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது ராயல் என்ஃபீல்டு நிறுவனம்.
ராயல் என்ஃபீல்டு 440சிசி ஸ்கிராம்: என்ன எதிர்பார்க்கலாம்?
தங்களுடைய இந்த புதிய ஸ்கிராம் பைக் மாடலுக்கு, ஸ்கிராம் 411-ல் பயன்படுத்தப்பட்டிருக்கும் 411சிசி இன்ஜினை அடிப்படையாகக் கொண்ட புதிய 440சிசி இன்ஜினை உருவாக்கவிருக்கிறது ராயல் என்ஃபீல்டு. D4K என்ற குறியீட்டுப் பெயரைக் கொண்டு உருவாக்கப்பட்டு வரும் 440சிசி ஸ்கிராமை, தங்களது புதிய 450சிசி லிக்விட்-கூல்டு இன்ஜினைக் கொண்ட பைக்குகளுக்கான ப்ளாட்ஃபார்மில் தயாரிக்கவிருக்கிரது RE. மேலும், இந்த புதிய பைக்கும் ஆஃப்-ரோடிங்கை மையப்படுத்தியே இருக்கும் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது. கடந்த வாரம் மட்டும், குறைவான விலையில் இரண்டு 400சிசி பைக்குகளை வெளிநாட்டு நிறுவனங்களான ஹார்லி டேவிட்சனும், ட்ரையம்ப்பும் வெளியிட்டிருக்கின்றன. எனவே, அவற்றோடு போட்டியிடும் வகையில், தங்களுடைய புதிய 440சிசி பைக்கையும் குறைவான விலையில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.