
ஃப்ளிப்கார்ட்டைத் தொடர்ந்து அமேசானிலும் களமிறங்கியது ராயல் என்ஃபீல்டு; ஆன்லைன் வர்த்தகத்தில் புதிய சகாப்தம்
செய்தி முன்னோட்டம்
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது பிரபலமான 350சிசி பைக் வகைகளை அமேசான் இந்தியா (Amazon India) தளத்தில் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது. இது இ-காமர்ஸ் தளத்தில் தனது இருப்பை விரிவாக்கும் முயற்சியாகும். முன்னதாக இதேபோன்ற ஒரு ஒத்துழைப்பை ஃப்ளிப்கார்ட்டுடன் ராயல் என்ஃபீல்டு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. வாடிக்கையாளர்கள் இனி கிளாசிக் 350, ஹண்டர் 350, புல்லட் 350, மீட்டியோர் 350 மற்றும் கோவன் கிளாசிக் 350 உள்ளிட்ட ஐந்து மாடல்களை, அமேசானில் உள்ள பிரத்யேக ராயல் என்ஃபீல்டு பிராண்ட் ஸ்டோர் மூலம் நேரடியாக வாங்கலாம். இருப்பினும், ஹிமாலயன் 450 மற்றும் 650சிசி பைக்குகள் போன்ற அதிக விலையுள்ள பெரிய மாடல்கள் ஆன்லைன் விற்பனையில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளன.
நகரங்கள்
குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே ஆன்லைன் விற்பனை
அமேசானுடனானஅமேசானுடனான இந்த கூட்டாண்மை, வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான நெகிழ்வான கட்டணத் தேர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தற்போது இந்த ஆன்லைன் விற்பனை வசதி அகமதாபாத், சென்னை, ஹைதராபாத், புது டெல்லி மற்றும் புனே ஆகிய ஐந்து முக்கிய நகரங்களில் மட்டுமே கிடைக்கிறது. ஆன்லைனில் வாங்கும் பைக்குகளுக்கான டெலிவரி மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவை ஆகியவற்றை, வாடிக்கையாளர் தேர்ந்தெடுக்கும் உள்ளூர் டீலர்ஷிப் மூலமே மேற்கொள்ளப்படும் என்று நிறுவனம் உறுதி செய்துள்ளது. பைக்குகள் தவிர, இந்த ஆன்லைன் ஸ்டோரில் ராயல் என்ஃபீல்டின் உதிரிபாகங்கள், கியர்கள் மற்றும் இதர பொருட்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன.