தமிழகத்தில் சாலை வரி உயர்வைத் தொடர்ந்து மோட்டார் வாகனங்களின் விலையும் உயர்கிறது!
தமிழ்நாட்டில் மோட்டார் வாகனங்களுக்கான சாலை வரியை தமிழக போக்குவரத்துத்துறை உயர்த்தவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. கடந்த 2021-ம் ஆண்டு தமிழக நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டார் அப்போதைய நிதியமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜன். அப்போது, தென்மாநிலங்களிலேயே தமிழகமே குறைந்த சாலை வரியைக் கொண்டிருப்பதாகவும், அதனை மறுசீரமைக்கவும் வலியுறுத்தியிருந்தார். அதன் பின், கடந்த ஆண்டு, தமிழக போக்குவரத்துத்துறை, சாலை வரிகளை சீரமைக்க முன்மொழிந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்தே தற்போது சாலை வரிகள் உயர்த்தப்படவிருக்கின்றன. கிடைத்த தகவல்களின்படி, குறைவான விலை கொண்ட வாகனங்களின் சாலை வரி கொஞ்சம் கூடுதலாகவும், அதிக விலை கொண்ட வாகனங்களுக்கு அதிக சாலை வரியும் விதிக்கப்படவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
சாலை வரி எவ்வளவு உயர்கிறது?
கடைசியாக இரு சக்கர வாகனங்களுக்கு 2008-ம் ஆண்டும், கார்களுக்கு 2010-ம் ஆண்டு சாலை வரித் திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி கடந்த 15 ஆண்டுகளாக, இருசக்கர வாகனங்கள் 8%-மும், ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலை கொண்ட கார்களுக்கு 10%-மும், ரூ.10 லட்சத்திற்கும் மேல் விலை கொண்ட கார்களுக்கு 15%-மும் சாலை வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. புதிய திருத்தத்தில், ரூ.1 லட்சம் மற்றும் அதற்கும் குறைவான விலை கொண்ட பைக்குகளுக்கு 10%-மும், அதற்கும் மேல் விலை கொண்ட பைக்குகளுக்கு 12%-மும் சாலை வரி விதிக்கப்படவிருக்கிறது. அதேபோல், ரூ.5 லட்சம் விலை கொண்ட கார்களுக்கு 12%, ரூ.5-10 லட்சம் விலை கொண்ட கார்களுக்கு 13%-மும், ரூ.10-20 லட்சம் விலை கொண்ட கார்களுக்கு 15% வரியும் விதிக்கப்படவிருக்கிறது.