ஜனவரி 10 வரை, பாம்பன் பாலத்தின் மேல் ரயில்கள் செல்ல தடை
பராமரிப்பு பணிகள் காரணமாக, ஜனவரி 10 -ம் தேதி வரை, பாம்பன் பாலத்தில், ரயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாக, தெற்கு ரயில்வேயின் மதுரைக் கோட்டம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் முடிவடைந்த பின், ரயில்வே பொறியாளர்கள் மூலம் சோதனை நடத்தப்பட்டு, அதன் பின்னரே பாலத்தில் ரயில்கள் செல்ல அனுமதிக்கப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 23ல், சீரமைப்பு பணி துவங்கியதாக, செய்திகள் தெரிவிக்கின்றன. பாம்பன் ரயில் பாலம், ராமேஸ்வரம் தீவுப் பகுதியை, மண்டபம் நிலப்பரப்புடன் இணைப்பதற்காக கட்டப்பட்டது.
பாம்பன் பலம் மற்றும் ரயில் போக்குவரத்து
இந்த தடை காரணமாக, மதுரை, திருச்சியில் இருந்து வந்த பயணிகள் ரயில்கள், ராமநாதபுரத்தில் நிறுத்தப்பட்டதோடு, சென்னையில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரயில்களும், மண்டபத்தில் நிறுத்தப்பட்டன. ராமேஸ்வரத்தில் இருந்து ரயில்கள் புறப்பட அனுமதி இல்லை என செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. எனினும், ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய ரயில்கள் மண்டபத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், புதிய பாலம் கட்டும் பணியும் விரைவாக நடைபெற்று வருவதாகவும், அந்த பால வேலைகள் பற்றிய வீடியோ ஒன்றை, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சமீபத்தில், தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புதிய பாம்பன் பாலத்தின் கட்டுமான தொகை ரூ.540 கோடி என்றும் கூறப்படுகிறது. பாலத்தின் கட்டுமானம், பிப்ரவரி 2020 இல் தொடங்கியது.