இரு சக்கர வாகன சந்தையில் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது ஓலா எலக்ட்ரிக்
ஓலா எலக்ட்ரிக் தனது முதல் 'ரோட்ஸ்டர்' என்ற பெயரில் தனது முதல் எலக்ட்ரிக் பைக்களை இருசக்கர மின்சார வாகனங்கள் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரை ஸ்கூட்டர்களை மட்டுமே விற்றுவந்த ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்திற்கு இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக உள்ளது. இந்த வரிசையில் ரோட்ஸ்டர் எக்ஸ், ரோட்ஸ்டர் மற்றும் ரோட்ஸ்டர் ப்ரோ என மூன்று வாகனங்கள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன. ரோட்ஸ்டர் எக்ஸ் 2.5 கிலோவாட் மாறுபாட்டின் வரம்பு ₹74,999இல் தொடங்குகிறது. ரோட்ஸ்டர் ப்ரோ 8 கிலோவாட் சக்தியுடன் ₹1.99 லட்சம் விலையிலும், 16 கிலோவாட் சக்தியுடன் ₹2.49 லட்சம் என இரண்டு வகைகளில் கிடைக்கிறது. இந்த ஆண்டு தீபாவளிக்குள் இந்த மாடல் மோட்டார் சைக்கிள்களின் டெலிவரி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரோட்ஸ்டர் மாடல்களின் சிறப்பம்சங்கள்
ரோட்ஸ்டர் ப்ரோ இ-மோட்டார் சைக்கிள் மணிக்கு 0-40கிமீ முடுக்க நேரத்தை வெறும் 1.2 வினாடிகளில் வழங்குகிறது. இது கடந்த ஆண்டு கான்செப்ட் மாடலுக்கு ஏற்ப சூப்பரான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இந்த பைக் அதிகபட்சமாக மணிக்கு 194 கிமீ வேகத்தில் செல்லும் என்றும், ஒருமுறை சார்ஜ் செய்தால் 579 கிமீ தூரம் வரை பயணிக்கும் என்றும் கூறப்படுகிறது. இது ADAS பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் ஒரு பெரிய 10 அங்குல தொடுதிரை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 'பாரத்செல்' எனப்படும் புதிய பேட்டரி தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது இந்தியாவின் முதல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பேட்டரியாக அமைக்கப்பட்டுள்ளது. நிதியாண்டு 2025-26 முதல் காலாண்டில் ஓலா ஸ்கூட்டர்களில் இவை ஒருங்கிணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.