
ஓலா எலக்ட்ரிக் சாதனை: உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஃபெரைட் மோட்டாருக்கு அரசு அங்கீகாரம்
செய்தி முன்னோட்டம்
பெங்களூரைச் சேர்ந்த ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், உள்நாட்டிலேயே உருவாக்கிய ஃபெரைட் மோட்டாருக்கு அரசு அங்கீகாரத்தைப் பெற்ற இந்தியாவின் முதல் இரு சக்கர மின்சார வாகன (EV) உற்பத்தியாளர் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த முக்கியச் சாதனை, மின்சார வாகனத் துறையில் சுயசார்பை நோக்கிய ஒரு பெரிய தொழில்நுட்ப முன்னேற்றத்தைக் குறிக்கிறது. இந்த அங்கீகாரம் தமிழ்நாட்டில் உள்ள குளோபல் ஆட்டோமோட்டிவ் ரிசர்ச் சென்டர் (GARC) மூலம் வழங்கப்பட்டது. ஓலாவின் ஃபெரைட் மோட்டார், AIS 041 தரநிலைகளின்படி கட்டாயமான செயல்திறன் மற்றும் சக்தி சோதனைகளில் வெற்றிகரமாகத் தேர்ச்சி பெற்றது.
சிறப்பம்சம்
ஓலா மோட்டாரின் சிறப்பம்சம்
இந்தச் சோதனைகள், ஓலாவின் உள்நாட்டு மோட்டார், இறக்குமதி செய்யப்படும் அரிய வகை கனிமங்கள் மூலம் உருவாக்கப்படும் நிரந்தர காந்த மோட்டார்களைப் போலவே சிறந்த செயல்திறனை வழங்குவதை உறுதிப்படுத்தியது. இது அதன் 7kW மற்றும் 11kW ஆகிய இரண்டு வகைகளுக்கும் பொருந்தும். இந்த ஃபெரைட் தொழில்நுட்பம், விலையுயர்ந்த அரிய வகை கனிமங்களை இறக்குமதி செய்ய வேண்டிய தேவையை நீக்குகிறது. இதன் மூலம், உற்பத்திச் செலவுகளைக் குறைப்பது மற்றும் விநியோகச் சங்கிலி பாதிப்புகளைத் தவிர்ப்பது என இரண்டு முக்கியச் சவால்களை ஓலா சமாளிக்கிறது. 'சங்கல்ப் 2025' நிகழ்வில் இந்த மோட்டாரை முதன்முதலில் காட்சிப்படுத்திய ஓலா எலெக்ட்ரிக், தற்போது இந்தச் சான்றளிக்கப்பட்ட மோட்டாரைத் தனது அனைத்து மின்சார ஸ்கூட்டர் மாடல்களிலும் இணைக்கத் திட்டமிட்டுள்ளது.