அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் வெளியானது புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450
நீண்ட கால காத்திருப்புக்குப் பிறகு இறுதியாக தங்களது புதிய ப்ரீமியம் பைக்கான ஹிமாலயன் 450-யை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது ராயல் என்ஃபீல்டு. புதிய இன்ஜின் மற்றும் பல்வேறு புதிய வசதிகளுடன் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகமாகியிருக்கிறது புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450. கூகுள் மேப்ஸ் வசதியுடன் கூடிய வட்ட வடிவ TFT கலர் டிஸ்பிளே, ரைடு-பை-வயர் தொழில்நுட்பம், ஸ்விட்ச் செய்து கொள்ளக்கூடிய ஏபிஎஸ் மற்றும் முழுவதுமான எல்இடி விளக்குகளுடன் வெளியாகியிருக்கிறது புதிய ஹிமாலயன். மேலும், 21/17 இன்ச் ஸ்போக் வீல்கள், முன்பக்கம் ஷோவா USD போர்க், பின்பக்கம் மோனோஷாக் சஸ்பென்ஷன் செட்டப்புகள் மற்றும் இரண்டு வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வசதிகளைக் கொண்டிருக்கிறது ஹிமாலயன் 450.
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450: இன்ஜின் மற்றும் விலை
புதிய ஹிமாலயனில் புதிய 452 சிசி இன்ஜினைப் பயன்படுத்தியிருக்கிறது ராயல் என்ஃபீல்டு. 6 ஸபீடு கியர்பாக்ஸ் கொண்ட இந்தப் புதிய இன்ஜினானது 40hp பவர் மற்றும் 40Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கிறது. 196 கிலோ எடை, 17 லிட்டர் எரிபொருள் டேங்க் மற்றும் அட்ஜஸ்ட் செய்து கொள்ளக்கூடிய வகையிலான 825மிமீ சீட் உயரம் ஆகியவற்றையும் கொண்டிருக்கிறது புதிய ஹிமாலயன். இந்த ஹிமாலயனின் அடிப்படை மாடலை இந்தியாவில் ரூ.2.69 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிட்டிருக்கிறது ராயல் என்ஃபீல்டு. அதிகபட்சமாக ரூ.2.84 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலை வரை விற்பனை நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நிலையில், வரும் டிசம்பர் 31ம் தேதி வரை மட்டுமே இந்த அறிமுக விலைகளில் புதிய ஹிமாலயனை வாங்க முடியுமாம்.