புதிய 2026 ஆடி Q3 கார் இந்தியாவில் அறிமுகம்; விலை மற்றும் முக்கிய அம்சங்கள்
செய்தி முன்னோட்டம்
ஜெர்மனியின் முன்னணி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி இந்தியாவில் தனது புதிய ஆடி Q3 காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இக்காரின் ஆரம்ப விலை ₹52 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் புதிய வெளிப்புற வடிவமைப்புடன் சந்தைக்கு வந்துள்ளது. மேலும் மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் தொழில்நுட்ப வசதிகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. பயணிகளின் வசதிக்காக பல புதிய சொகுசு அம்சங்களை ஆடி நிறுவனம் இதில் வழங்கியுள்ளது. இந்த புதிய கார் சொகுசு காம்பேக்ட் எஸ்யூவி பிரிவில் புதிய மைல்கல்லை எட்டும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.
என்ஜின்
சக்திவாய்ந்த என்ஜின் மற்றும் ஆல்-வீல் டிரைவ் தொழில்நுட்பம்!
புதிய ஆடி Q3 கார் 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் மூலம் இயங்குகிறது.
இது 201 bhp பவர் மற்றும் 320 Nm டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. வெறும் 7.1 வினாடிகளில் பூஜ்ஜியத்திலிருந்து 100 கி.மீ வேகத்தை இந்த கார் எட்டிவிடும்.
மேலும் ஆடியின் புகழ்பெற்ற குவாட்ரோ ஆல்-வீல் டிரைவ் தொழில் நுட்பம் இதில் தரநிலையாக வழங்கப்பட்டுள்ளது.
இது அனைத்து வகையான சாலைகளிலும் சிறந்த கட்டுப்பாட்டை ஓட்டுநருக்கு வழங்கும்.
ஓட்டுநரின் விருப்பத்திற்கேற்பப் பயணிக்க 5 வகையான டிரைவிங் மோட்களும் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.
தொழில்நுட்பம்
அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் ஆடியோ வசதிகள்
இந்த காரின் முகப்பில் 25,600 மைக்ரோ எல்இடி-கள் கொண்ட புதிய ஹெட்லைட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
காரின் உட்புறத்தில் 30.22 செ.மீ டிஜிட்டல் திரை மற்றும் 32.51 செ.மீ தொடுதிரை அமைக்கப்பட்டுள்ளது.
பாடல்களைக் கேட்க 12 ஸ்பீக்கர்கள் கொண்ட சோனோஸ் ஆடியோ சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.
வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 30 வண்ணங்களில் ஆம்பியன்ட் லைட்டிங் வசதியும் இதில் உண்டு.
காரின் பின்வரிசை இருக்கைகளை சாய்க்கும் வசதியும் பயணிகளின் வசதிக்காக சேர்க்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அம்சங்கள்
9 ஏர்பேக்குகள் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள்
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய இக்காரில் 9 ஏர்பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் அடாப்டிவ் குரூஸ் கண்ட்ரோல் மற்றும் அவசரகால பிரேக் அசிஸ்ட் போன்ற நவீன வசதிகளும் உள்ளன.
ஓட்டுநரின் கவனத்தை கண்காணிக்கும் சிறப்புத் தொழில்நுட்பமும் காரில் சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும் வாடிக்கையாளர்களுக்கு 15 ஆண்டுகள் வரை ரோட்சைட் அசிஸ்டன்ஸ் சேவையை ஆடி நிறுவனம் வழங்குகிறது.
இத்துடன் 10 ஆண்டுகள் வரையிலான நீட்டிக்கப்பட்ட வாரண்டி திட்டங்களும் வழங்கப்படுகின்றன.
இப்புதிய கார் சந்தையில் பிற சொகுசு கார்களுக்குக் கடுமையான போட்டியாக அமையும்.