Loading...
லாரிகளுக்கு மூடி கட்டாயம்: லாரி டிரைவர்களுக்கு மத்திய அரசு போட்ட புதிய உத்தரவு
இந்த புதிய கட்டுப்பாடு 2027 ஏப்ரல் 1 முதல் நாடு முழுவதும் கட்டாயமாக நடைமுறைக்கு வருகிறது

லாரிகளுக்கு மூடி கட்டாயம்: லாரி டிரைவர்களுக்கு மத்திய அரசு போட்ட புதிய உத்தரவு

எழுதியவர் Venkatalakshmi V
Aug 11, 2026
06:54 pm

செய்தி முன்னோட்டம்

சாலையில் பயணிக்கும்போது திறந்தவெளி லாரிகளிலிருந்து மணல், கற்கள் மற்றும் கழிவுப்பொருட்கள் சிதறி விபத்து ஏற்படும் அச்சத்திற்கும் துர்நாற்றத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989-ல் திருத்தம் மேற்கொண்டு, 'மத்திய மோட்டார் வாகனங்கள் (12-வது திருத்தம்) விதிகள் 2026' என்ற பெயரில் ஜூலை 28 அன்று மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, இந்தியாவில் இயங்கும் அனைத்து டிப்பர் மற்றும் டம்பர் லாரிகளும் தங்களது சுமைப் பகுதியை மேலிருந்து முழுமையாக மூடும் அமைப்பைக் கட்டாயமாகக் கொண்டிருக்க வேண்டும். இந்த புதிய கட்டுப்பாடு 2027 ஏப்ரல் 1 முதல் நாடு முழுவதும் கட்டாயமாக நடைமுறைக்கு வருகிறது.

எச்சரிக்கை வசதி

தானியங்கி மூடி அமைப்புகளின் இயக்கம், ஓட்டுநர்களுக்கான ஒலி-ஒளி எச்சரிக்கை வசதி

லாரிகளின் சுமையை மூடுவதற்கு பயன்படும் இந்தச் சிறப்பு அமைப்புகள் மின்சாரம், எலக்ட்ரோ-மெக்கானிக்கல், ஹைட்ராலிக் அல்லது மெக்கானிக்கல் முறையில் இயங்கக்கூடியதாக இருக்க வேண்டும்.

வெறும் தார்ப்பாய் துணியை கொண்டு ஓட்டுநர்கள் கையால் தற்காலிகமாக கட்டுவதற்கு பதிலாக, வாகனத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட தானியங்கி கருவிகள் மூலம் சுமைப்பகுதி முழுமையாக மூடப்படுவதை லாரி உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

சுமை மூடி திறந்திருந்தாலோ அல்லது சரியாக மூடப்படாமல் வாகனம் நகர்ந்தாலோ, ஓட்டுநருக்கு உடனடியாக எச்சரிக்கை விடுக்கும் வகையில் லாரியின் கேபினுக்குள் ஒலி-ஒளி எச்சரிக்கை சாதனம் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த மூடி அமைப்பை பொருத்துவதால் ஏற்படும் கூடுதல் உயரம், லாரியின் ஒட்டுமொத்த சட்டப்பூர்வ உயரக் கணக்கீட்டில் சேர்க்கப்படாது என்றும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

காற்று மாசு

சாலைப் பாதுகாப்பும் காற்று மாசு தடுப்பும்

கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட வரைவு அறிவிக்கை மீது பெறப்பட்ட பொதுமக்களின் கருத்துக்களைப் பரிசீலித்த பிறகே இந்த விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

இப்புதிய சட்டப் பிரிவின் மூலம் கட்டுமானப் பொருட்கள் சாலையில் சிதறி ஏற்படும் விபத்துகள் தடுக்கப்பட்டு, வாகன ஓட்டிகளின் பாதுகாப்பும் காற்று மாசுபடுதலும் பெருமளவில் கட்டுப்படுத்தப்படும்.

ADVERTISEMENT