சாலை பாதுகாப்பை மேம்படுத்த 2027 முதல் அனைத்து மின்சார வாகனங்களிலும் AVAS'ஐ கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு
செய்தி முன்னோட்டம்
சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், நாட்டில் உள்ள அனைத்து மின்சாரக் கார்கள், பேருந்துகள் மற்றும் டிரக்குகள் ஆகியவற்றில் அகௌஸ்டிக் வெஹிக்கிள் அலெர்ட்டிங் சிஸ்டம் (AVAS) எனப்படும் செயற்கை ஒலியை உருவாக்கும் பாதுகாப்பு அம்சத்தைக் கட்டாயமாக்க மத்தியச் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) முன்மொழிந்துள்ளது. மின்சார வாகனங்கள் (EVs) மிகவும் அமைதியாகச் செல்வதால், பாதசாரிகள் மற்றும் பிற சாலைப் பயனர்களுக்கு வாகனத்தின் இருப்பு குறித்த எச்சரிக்கை ஒலி எழுப்ப AVAS பயன்படுத்தப்படுகிறது. மத்திய அமைச்சகத்தின் வரைவு அறிவிப்பில், இந்தப் புதிய விதிமுறையை அமல்படுத்துவதற்கான கால அட்டவணை இரண்டு கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இரண்டு கட்டங்கள்
இரண்டு கட்டங்களாக அமல்படுத்த முடிவு
மத்திய அமைச்சகத்தின் வரைவு அறிவிப்பின்படி, அக்டோபர் 1, 2026 முதல் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் அனைத்து மின்சாரப் பயணிகள் மற்றும் சரக்கு வாகன (புதிய மாடல்கள்) மாடல்களிலும் AVAS கருவி பொருத்தப்படுவது கட்டாயமாகும். மேலும், அக்டோபர் 1, 2027 முதல் M மற்றும் N பிரிவுகளின் கீழ் வரும் ஏற்கெனவே உள்ள மின்மயமாக்கப்பட்ட வாகன மாடல்களுக்கும் இந்தக் கட்டுப்பாடு விரிவுபடுத்தப்படும். இந்தப் பிரிவுகளின்கீழ் மின்சாரக் கார்கள், பேருந்துகள் (பிரிவு M) மற்றும் மின்சார டிரக்குகள், பிற சரக்கு வாகனங்கள் (பிரிவு N) ஆகியவை அடங்கும். இந்த வாகனங்களில் பொருத்தப்படும் AVAS கருவி AIS-173 தரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கேட்கும் திறன் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.