சென்ற ஆண்டு, சீட் பெல்ட் அணியாததால், சாலை விபத்துகளில் 16,000க்கும் மேல் உயிரிழந்துள்ளனர்
சென்ற ஆண்டில் மட்டும், சீட் பெல்ட் அணியாததால், சாலை விபத்துகளில் 16,397 பேர் மேல் உயிரிழந்துள்ளனர் என்று, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் (MoRTH) அறிக்கை வெளியிட்டுள்ளனர். அவர்களில் 8,438 ஓட்டுநர்கள், மற்றும் மீதமுள்ள 7,959 பேர் பயணிகள். அதேபோல, ஹெல்மெட் அணியாததால் சாலை விபத்துகளில் 46,593 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதில் 32,877 ஓட்டுநர்கள் மற்றும் 13,716 பேர் சக பயணிகள் என்றும் 'இந்தியாவில் சாலை விபத்துகள்- 2021' என்ற தலைப்பிலான அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில் மொத்தம் 4,12,432 சாலை விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. இதில் 1,53,972 பேர் உயிரிழந்தனர், 3,84,448 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சாலை விபத்துகள்
மேலும் அந்த அறிக்கையின்படி, 2021 ஆம் ஆண்டில் ஹெல்மெட் அணியாததால் 93,763 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் சீட் பெல்ட் அணியாததால், 39,231 பேர் காயம் அடைந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலை பயணங்களின் போது சீட் பெல்ட் மற்றும் ஹெல்மெட்-ஐ கட்டாயம் ஆக்கியுள்ளது, மத்திய அரசு. சில விதிவிலக்குகளைத் தவிர, இரு சக்கர வாகனங்களில் செல்லும் அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம். மத்திய மோட்டார் வாகன விதிகளின் (CMVR) விதி 138 (3) இன் கீழ், பின் இருக்கையில் அமர்ந்திருக்கும் பயணிகள் சீட் பெல்ட் அணியாமல் இருந்தால், 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றாலும், பெரும்பாலான மக்கள் இந்த கட்டாய விதியை புறக்கணிக்கிறார்கள் என அந்த அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.