சுமாரான விற்பனையைத் தொடர்ந்து ஹெக்டர் மாடல்களின் விலையைக் குறைத்த எம்ஜி மோட்டார்
இந்தியாவில் அஸ்டர், ஹெக்டர் மற்றும் கிளாஸ்டர் என மூன்று எரிபொருள் இன்ஜின் கொண்ட கார்களை விற்பனை செய்து வருகிறது எம்ஜி மோட்டார் நிறுவனம். இவற்றில், ஹெக்டர் மற்றும் ஹெக்டர் பிளஸ் எஸ்யூவி மாடல்களை, மஹிந்திரா எக்ஸ்யூவி 700 மற்றும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ N ஆகிய மாடல்களுக்குப் போட்டியாக விற்பனை செய்து வருகிறது எம்ஜி. மேற்கூறிய மஹிந்திரா மாடல்கள் மாதத்திற்கு 6,000 கார்கள் விற்பனையாக நிலையில், எம்ஜியின் ஹெக்டர் மாடல்களானது மாதத்திற்கு 2,000 கார்களுக்குள்ளாகவே விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், தங்களது இந்திய லைன்அப்பில் உள்ள ஹெக்டர் மாடல்களின் விலைகளைக் குறைத்திருக்கிறது எம்ஜி மோட்டார் நிறுவனம்.
எவ்வளவு விலை குறைந்திருக்கிறது எம்ஜி ஹெக்டர்?
ஹெக்டர் மாடலின் பெட்ரோல் இன்ஜின் கொண்ட அடிப்படை வேரியன்டிற்கு ரூ.27,000 முதல் டாப்-எண்டிற்கு ரூ.66,000 வரை விலை குறைப்பு செய்திருக்கிறது எம்ஜி. இதனைத் தொடர்ந்து, எம்ஜி ஹெக்டாரானது, ரூ.14.73 லட்சம் முதல் ரூ.21.73 லட்சம் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்படவிருக்கிறது. மேலும், ஹெக்டரின் டீசல் இன்ஜின் கொண்ட வேரியன்ட்களின் விலைகளை ரூ.86,000 முதல் ரூ.1.29 லட்சம் வரை குறைத்திருக்கிறது எம்ஜி. 7 சீட்டர் கொண்ட ஹெக்டர் பிளஸ் மாடல்களுக்கு ரூ.81,000 வரை விலைக்குறைப்பு செய்திருக்கிறது எம்ஜி. மேலும், அனைத்து டீசல் இன்ஜின் கொண்ட மாடல்களின் விலையும், குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் வரையாவது குறைக்கப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து தற்போது, ரூ.17.50 லட்சம்-ரூ.22.43 லட்சம் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்படவிருக்கிறது எம்ஜி ஹெக்டர் பிளஸ் மாடல்.