என்ஜின் பாழாகிறது! E20 பெட்ரோல் குறித்து நாட்டின் முன்னணி கார் நிறுவனங்கள் அதிர்ச்சித் தகவல்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் 20% எத்தனால் கலக்கப்பட்ட E20 பெட்ரோல் பயன்பாடு அதிகரிக்கப்பட்டுள்ள சூழலில், அதில் கலந்துள்ள மாசுகள் குறித்து நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களான மாருதி சுஸூகி, டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு (SIAM) ரகசிய மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளன. இத்தகவல் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பொதுவெளியில் அரசின் E20 திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்த போதிலும், உள்நாட்டில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் கண்டறியப்பட்ட பாதிப்புகள் நிறுவனங்கள் இடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.
மாசுகள்
பெட்ரோல் மாதிரிகளில் அதிர்ச்சியளிக்கும் மாசுகள்
நாடு முழுவதும் 18 மாநிலங்களில் உள்ள பெட்ரோல் பங்குகளில் இருந்து 250க்கும் மேற்பட்ட மாதிரிகளை சேகரித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
அதில் அனுமதிக்கப்பட்ட அளவை விட மிக அதிக அளவில் குளோரைடு மற்றும் ஈரப்பதம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அரசின் அனுமதிக்கப்பட்ட குளோரைடு அளவு 3 ppm மட்டுமே என்ற நிலையில், ராஜஸ்தானில் 570 ppm வரையிலும், டெல்லியில் 420 ppm வரையிலும் குளோரைடு பதிவாகியுள்ளது.
அதேபோல உத்தரப்பிரதேசம் மற்றும் ஆந்திராவில் ஈரப்பதத்தின் அளவும் அனுமதிக்கப்பட்ட 3,000 ppmஐ விட 4 மடங்கு அதிகமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆபத்து
என்ஜின்கள் பாழாகும் ஆபத்து
E20 பெட்ரோலில் உள்ள ஆர்கானிக் குளோரைடு மாசுகள் வாகனங்களின் என்ஜின்களை வெறும் 200 கிலோமீட்டர் பயணத்திற்குள்ளேயே பாழாக்கிவிடும் என்று மஹிந்திரா நிறுவனத்தின் மூத்த பொறியாளர் ரமாபிரபு சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், 1 ppmக்கும் அதிகமாகக் குளோரைடு இருந்தால் அது எரிபொருள் செலுத்தும் ஃபியூயல் இன்ஜெக்டர்களைக் கடுமையாகப் பாதிக்கும் என மாருதி சுஸூகி நிறுவனத்தின் மூத்த அதிகாரி அனூப் பட் தனது மின்னஞ்சலில் கவலை தெரிவித்துள்ளார்.
அதிக ஈரப்பதம் காரணமாகப் பெட்ரோல் நிரப்பிய உடனே வாகனங்கள் இயங்காமல் முடங்கும் அபாயமும் உள்ளது.
மத்திய அரசு பதில்
SIAM விளக்கமும் மத்திய அரசின் பதிலும்
முன்னதாக, E20 பெட்ரோல் மாசுபாடு குறித்து மத்திய அரசிற்குக் கடிதம் எழுதிய SIAM அமைப்பு, பின்னர் சில புள்ளிவிவரங்களை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டியுள்ளது எனக் கூறி அக்கடிதத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டது.
அறிவியல் ரீதியிலான தெளிவான தரவுகள் இல்லாததால் கடிதம் திரும்பப் பெறப்பட்டதாகக் கூறியுள்ள SIAM, முறையான ஆய்வை மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதனிடையே மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, எண்ணெய் நிறுவனங்கள் நடத்திய சோதனையில் E20 பெட்ரோலால் எந்தப் பாதிப்பும் இல்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.