மாருதி சுஸூகியின் அக்டோபர் மாத வாகன விற்பனை வரலாறு காணாத உயர்வு
இந்தியாவின் மிகப்பெரிய பயணிகள் கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸூகி அக்டோபர் 2024இல் அதன் அதிகபட்ச மாதாந்திர விற்பனையை அறிவித்துள்ளது. நிறுவனத்தின் விற்பனை கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 4% அதிகரித்து, மொத்தம் 2,06,434 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு அக்டோபரில் 1,99,217 யூனிட்களாக இருந்தது. வலுவான ஏற்றுமதி செயல்திறன் மற்றும் வாகனங்களின் விற்பனை அதிகரிப்பு ஆகியவற்றால் இந்த வளர்ச்சி சாத்தியமாகி உள்ளது. ஒட்டுமொத்த விற்பனை சாதனை இருந்தபோதிலும், உள்நாட்டு பயணிகள் வாகன விற்பனையில் மாருதி சுஸூகி ஆண்டுக்கு 5% சரிவைக் கண்டுள்ளது. இந்நிறுவனம் இந்த ஆண்டு அக்டோபரில் 1,59,591 யூனிட்களை உள்நாட்டில் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 1,68,047 யூனிட்களை விற்பனை செய்துள்ளது.
ஏற்றுமதி அதிகரிப்பு
மாருதி சுஸூகி கார்கள் அக்டோபரில் 33,168 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 21,951 யூனிட்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டிருந்த நிலையில், இது மிகப்பெரிய உயர்வாகும். ஆல்டோ மற்றும் எஸ்-பிரஸ்ஸோ உள்ளிட்ட மினி-செக்மென்ட் கார்கள் பிரிவில் விற்பனை, கடந்த ஆண்டு அக்டோபரில் 14,568 யூனிட்களில் இருந்து 10,687 யூனிட்களாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 80,662 ஆக இருந்த காம்பாக்ட் கார் பிரிவு இந்த ஆண்டு 65,948 கார்கள் விற்பனையாகி குறைந்துள்ளது. எவ்வாறாயினும், பயன்பாட்டு வாகனங்கள் மற்றும் வேன்கள் விற்பனையில் அதிகரித்துள்ளன. முந்தைய 59,147 யூனிட்களுடன் ஒப்பிடுகையில் கடந்த மாதம் 70,644 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன.