நம்ம சென்னையில், மெரினா கடற்கரையையும் பெசன்ட் நகரையும் இணைக்க வரப்போகிறது ரோப் கார்
சென்னை மாநகரில், புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களான மெரினா கடற்கரையும், பெசன்ட் நகர் கடற்கரையும் இணைக்கும் விதமாக, ரோப் கார் வசதி அறிமுகப்படுத்த போவதாக, ஏற்கனவே சென்னை மாநகராட்சி அறிவித்து இருந்தது. அதன் தொடர்ச்சியாக, விரிவான அறிக்கை ஒன்றை தயாரிக்கும்படி, மத்திய அரசு சம்மந்தப்பட்ட அமைச்சரவைக்கு ஆணையிட்டுள்ளதாக, செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த ரோப் கார் அமைப்பதற்கான, விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை தயாரிப்பதற்கான முயற்சிகளை, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த ரோப் கார் ப்ராஜெக்ட் நாடு முழுவதும், 6 மாநிலங்களில், 10 இடங்களில், நிறுவ மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக, மகாராஷ்டிராவில், அதிகபட்சமாக 5 கிமீ தூரம் வரை ரோப்வே நிறுவப்படும்.
சென்னையில் ரோப் கார்
அடுத்தது, சென்னை மாநகரில் நிறுவப்படும். மெரினா கடற்கரை தொடங்கி பெசன்ட் நகர் பீச் வரை நீளும் இந்த ரோப்வே, கிட்டத்தட்ட 4.6 கிமீ தூரத்தை உள்ளடக்கியது. ரோப் கார் சேவைகளை நிறுவுவதற்கு முன், புவியியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழலில் ஏற்படும் பாதிப்புகள் உட்பட திட்டத்தின் பல்வேறு அம்சங்கள் பற்றி, ஆழமாக பகுப்பாய்வு செய்யப்படும், என செய்திகள் தெரிவிக்கின்றன. இரு மாதங்களுக்கு முன்னர், இது குறித்து பேசிய சென்னை நகர மேயர், ஆர்.பிரியா, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி பெற்று, விரைவில் இந்த சேவை தொடங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.