மகாராஷ்டிர சம்ருத்தி மஹாமார்க் விரைவு சாலையின் சிறப்பசங்கள்
இந்தியாவின் மிக நீளமான விரைவுச் சாலையாக மகாராஷ்டிர சம்ருத்தி மஹாமார்க் கருதப்படுகிறது. மும்பையில் தொடங்கி நாக்பூர் வரை, 700 கிலோமீட்டர் நீளத்தில் அமைந்திருக்கிறது. மும்பையில் இருந்து நாக்பூருக்கு செல்லும் பயண நேரத்தை பாதியாகக் குறைக்கிறது. 16 மணி நேரப் பயணம், சுமார் எட்டு மணி நேரமாக குறையும். மகாராஷ்டிராவின் தானே மற்றும் மும்பையிலிருந்து மாநிலத்தின் மறுமுனையில் உள்ள நாக்பூர் வரை இந்த விரைவுச் சாலை இயங்குகிறது. இதன் மூலம் 10 மாவட்டங்களையும், சுமார் 400 கிராமங்களையும் இந்த நெடுஞ்சாலை இணைக்கிறது. இந்த சாலையில், அதிகபட்சமாக 150கிமீ வேகத்தில் உங்கள் வாகனங்களை அதிகாரப்பூர்வமாக ஓட்டலாம். இதுவரை இந்தியாவில், ஒரு எக்ஸ்பிரஸ்வேயில் அனுமதிக்கப்பட்ட வேக வரம்பு மணிக்கு 120 கிமீ மட்டுமே.
சம்ருத்தி மஹாமார்க் விரைவு சாலை
மகாராஷ்டிரா சம்ருத்தி மஹாமார்கின் இரு புறமும் மூன்று வழிகள், 120 மீட்டர் அகலம் கொண்டிருக்கும். எதிர்காலத்தில், இருபுறமும் நான்கு வழிச்சாலையாக மாற்றும் வகையில், அரசு வடிவமைத்துள்ளது. புதிய விரைவுச் சாலை தடோபா புலிகள் காப்பகம், பென்ச் தேசியப் பூங்கா, கௌதாலா சரணாலயம் மற்றும் தன்சா வனவிலங்கு சரணாலயம் ஆகிய நான்கு வனவிலங்கு சரணாலயங்களுடன் இணைக்கப்படும். மேலும், வனவிலங்குகளுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் இருக்க, எட்டு சுரங்கப்பாதைகள் மற்றும் மேம்பாலங்களும் அமைந்துள்ளது. பல சுற்றுலா இடங்களை இணைக்கும் விதமாக இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஷீரடி, சூலா திராட்சைத் தோட்டங்கள், திரிம்பகேஷ்வர் சிவன் கோயில், மற்றும் அஜந்தா எல்லோரா குகைகள் போன்ற பல தலங்களை இணைக்கும். இவை அனைத்தும் எக்ஸ்பிரஸ்வேயின் 90 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ளன.