2024-ல் இந்தியாவில் வெளியாகவிருக்கும் கேடிஎம் மற்றும் ஹஸ்க்வர்னா பைக்குகள்
இந்த 2023ம் ஆண்டு புதிய 390 டியூக் மற்றும் 250 டியூக் ஆகிய ப்ரீமியம் பைக் மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருந்தது கேடிஎம். ஆனால், 2023ல் சொல்லிக் கொள்ளும் வகையிலான புதிய அறிமுகங்கள் எதுவும் ஹஸ்க்வர்னாவிடமிருந்து இல்லை. ஆனால், 2024ல் இரண்டு நிறுவனங்களுமே கவனிக்கத்தக்க சில புதிய பைக் மாடல்கள் மற்றும் அப்டேட்டட் மாடல்களை வெளியிடவிருக்கின்றன. முக்கியமாக, 2024ம் ஆண்டிற்கான அப்டேட் செய்யப்பட்ட புதிய 390 அட்வென்ச்சர் மாடலை வெளியிடத் திட்டமிட்டு வருகிறது கேடிஎம். 390 டியூக்கில் பயன்படுத்தப்பட்ட அதே 399சிசி இன்ஜினையே புதிய 390 அட்வென்ச்சர் மாடலிலும் பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது கேடிஎம்.
புதிய ஹஸ்க்வர்னா மாடல்கள்:
இந்தியாவில் தற்போது விட்பிலன் 250 மற்றும் ஸ்வர்ட்பிலன் 250 ஆகிய பைக் மாடல்களை விற்பனை செய்து வருகிறது ஹஸ்க்வர்னா. 2024-ல் இதன் பெரிய மாடலான ஸ்வர்ட்பிலன் 401 பைக் மாடலை இந்தியாவில் வெளியிடத் தயாராகி வருகிறது அந்நிறுவனம். இந்த பைக்கை தற்போது இந்திய சாலைகளில் அந்நிறுவனம் சோதனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. அதேபோல், ஏற்கனவே இந்தியாவில் விற்பனையில் இருக்கும் விட்பிலன் 250 மாடலின் அப்டேட்டட் வெர்ஷன் ஒன்றையும் 2024-ல் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது ஹஸ்க்வர்னா. கேடிஎம் 250 டியூக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே இன்ஜினுடன், ரூ.2.3 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் புதிய அப்டேட் செய்யப்பட்ட விட்பிலன் 250 பைக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.