இந்தியாவில் கியா செல்டோஸின் ஃபேஸ்லிப்ட் வெர்ஷனை அறிமுகம் செய்தது கியா
தங்களுடைய எஸ்யூவி லைன்அப்பில் முக்கியமான மாடலான செல்டோஸின் ஃபேஸ்லிப்ட் வெர்ஷனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது கியா. கடந்த ஆண்டே இந்த ஃபேஸ்லிப்ட் மாடலை சர்வதேச சந்தையில் கியா அறிமுகப்படுத்தியிருந்த நிலையில், ஒரு வருடத்திற்குப் பிறகு தற்போது தான் இந்தியாவில் இந்த ஃபேஸ்லிப்ட் அறிமுகப்படுத்தப்படுகிறது. புதிய செல்டோஸின் பம்பர்கள், ஹெட்லைட்களில் சின்னச் சின்ன டிசைன் மாற்றங்களை செய்திருக்கிறது கியா. வெளிப்புறம் கவனிக்கத்தக் மாற்றம் என்றால், அது புதிய 18-இன்ச் அலாய் வீல்கள் தான். முந்தைய மாடலை விட, புதிய மாடலில் க்ரோம் அக்சென்டைக் கொஞ்சம் குறைத்திருக்கிறது கியா. இரண்டு டூயல் டோன் நிறங்கள் உட்பட, பத்து நிறங்களில் புதிய செல்டோஸை விற்பனை செய்யவிருக்கிறது கியா. ஜூலை 14 முதல் புதிய செல்டோஸ் ஃபேஸ்லிப்டிற்க்கான முன்பதிவு தொடங்குகிறது.
கியா செல்டோஸ் ஃபேஸ்லிப்ட்: இன்ஜின் மற்றும் பிற வசதிகள்
தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் செல்டோஸில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 1.5-லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5-லிட்டர் டர்போ டீசல் இன்ஜின்கள் புதிய செல்டோஸிலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அதோடு கூடுதலாக, கடந்த மார்ச் மாதம் விற்பனை நிறுத்திய 1.4-லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் வேரியன்டுக்கு பதிலாக, 1.5-லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் கொண்ட வேரியன்டை அறிமுகப்படுத்தியிருக்கிறது கியா. புதிய டர்போ பெட்ரோல் வேரியன்டுடன், 6-ஸ்பீடு iMT கியர்பாக்ஸ் மற்றும் 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆகிய ஆப்ஷன்களை வழங்கியிருக்கிறது கியா. உட்பக்கம், இரண்டு டச்ஸ்கிரீன்கள், மறுவடிவம் செய்யப்பட்ட சென்டர் கன்சோல், பனோரமிக் சன்ரூஃப், டூயல் ஸோன் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் 17 ADAS பாதுகாப்பு வசதிகள் புதிதாக அளிக்கப்பட்டிருக்கின்றன.