பைக் பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்; ஹார்லி-டேவிட்சன் பைக்குகளின் விலை லட்சக்கணக்கில் குறையப்போகுது
செய்தி முன்னோட்டம்
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தின் படி, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர இரு சக்கர வாகனங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட உள்ளது. குறிப்பாக 800cc முதல் 1,600cc வரை இன்ஜின் திறன் கொண்ட பைக்குகளுக்கு இறக்குமதி வரி முழுமையாக நீக்கப்பட்டு, ஜீரோ டியூட்டி அந்தஸ்து வழங்கப்படுகிறது. இதனால் ஹார்லி-டேவிட்சன் பைக்குகளின் விலை இந்தியாவில் பெருமளவு குறைய வாய்ப்புள்ளது.
விலை
விலை எவ்வளவு குறையும்?
தற்போது அமெரிக்காவிலிருந்து முழுமையாகக் கட்டமைக்கப்பட்டு (CBU) இறக்குமதி செய்யப்படும் பைக்குகளுக்கு சுமார் 44% வரை வரி விதிக்கப்படுகிறது. புதிய ஒப்பந்தத்தின்படி இந்த வரி 0% ஆகக் குறைக்கப்பட உள்ளது. இதன் மூலம் ஹார்லி-டேவிட்சன் பைக்குகளின் விலை அவற்றின் மாடல்களைப் பொறுத்து சில லட்சங்கள் வரை குறையக்கூடும். உயர்தர கார்களுக்கான இறக்குமதி வரி 110% இலிருந்து 30% ஆகக் குறைக்கப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஹீரோ
ஹீரோ மோட்டோகார்ப் உடனான கூட்டணி
ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் கடந்த 2020-ம் ஆண்டு விற்பனை மந்தநிலை காரணமாக இந்தியாவில் இருந்து வெளியேறியது. பின்னர், இந்தியாவின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் உடன் கூட்டணி அமைத்தது. தற்போது விற்பனையாகும் X440 போன்ற குறைந்த சிசி பைக்குகள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. ஆனால், புதிய வரி விலக்கு ஒப்பந்தம் அமெரிக்காவிலிருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்படும் Fat Boy, Heritage Classic மற்றும் Pan America போன்ற விலையுயர்ந்த பைக்குகளுக்கு மட்டுமே பொருந்தும்.
டெஸ்லா
டெஸ்லாவுக்கு ஏமாற்றம்
இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு மட்டுமே வரிச்லுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மின்சார வாகனங்கள் இந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்படவில்லை. இதனால் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் எதிர்பார்த்த இறக்குமதி வரி குறைப்பு இந்த முறை கிடைக்கவில்லை. இந்தியாவிலேயே தயாரிப்புகளை மேற்கொள்ளும் உள்நாட்டு நிறுவனங்களைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.