2026ம் ஆண்டிற்குள் இந்தியாவிலும் பறக்கும் டாக்ஸி சேவை: இண்டிகோவின் தாய் நிறுவனம் திட்டம்
இந்தியாவின் விமான சேவைகளை வழங்கி வரும் இண்டிகோவின் தாய் நிறுவனமான இன்டர்குளோப் எண்டர்பிரைசஸ் நிறுவனமும், அமெரிக்காவைச் சேர்ந்த எலெக்ட்ரிக் பறக்கும் டாக்ஸியை உருவாக்கி வரும் ஆர்ச்சர் ஏவியேஷன் நிறுவனமும் இணைந்து, இந்தியாவில் பறக்கும் டாக்ஸி சேவையை வழங்கத் திட்டமிட்டு வருகின்றன. உலகின் பல நாடுகளில் பறக்கும் கார்கள் மற்றும் பறக்கும் டாக்ஸிக்களை அறிமுகப்படுத்த பல்வேறு நிறுவனங்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. உலகின் பல நாடுகளைச் சேர்ந்த முக்கிய நகரங்களில் வாகன நெரிசல் மற்றும் காற்று மாசுபாடு முக்கியப் பிரச்சினையாக உருவெடுத்து வரும் நிலையில், இந்த பறக்கும் எலெக்ட்ரிக் டாக்ஸிக்கள் அந்தப் பிரச்சினைகளுக்கான ஒரே தீர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் பறக்கும் டாக்ஸி சேவை:
மேற்கூறிய இரு நிறுவனங்களும் இணைந்து இந்தியாவின் முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் 2026ம் ஆண்டு பறக்கும் டாக்ஸி சேவையை வழங்கத் திட்டமிட்டு வருகின்றன. ஹெலிகாப்டரைப் போல செங்குத்தான புறப்பாடு மற்றும் தரையிறக்க வசதிகளைக் கொண்ட eVTOL என்ற எலெக்ட்ரிக் கார்களை உருவாக்கியிருக்கிறது ஆர்ச்சர் ஏவியேஷன். அவற்றின் உதவியுடனேயே இந்தியாவின் பறக்கும் டாக்ஸி சேவையை வழங்கவும் திட்டமிட்டு வருகிறது அந்நிறுவனம். இந்த பறக்கும் எலெக்ட்ரிக் டாக்ஸிானது நான்கு பயணிகள் மற்றும் ஒரு ஓட்டுநர் என ஐந்து பேருடன் 160 கிமீ வரை பறக்கும் திறனைக் கொண்டிருக்கிறது.
விரைவான ஆகாய வழிப் பயணம்:
டெல்லி போன்ற வாகன நெரிசல் மிக்க நகரங்களில் 60 முதல் 90 நிமிடங்கள் வரை தேவைப்படும் தரைவழிப் பயணத்தை இந்த எலெக்ட்ரிக் பறக்கும் டாக்ஸிக்கள் மூலமாக வெறும் ஏழு நிமிடங்களில் மேற்கொள்ள முடியம் எனத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம். பயணிகள் போக்குவரத்து மட்டுமின்றி, சரக்குப் போக்குவரத்து, மருத்துவப் பயன்பாடு மற்றும் அவசரப் பயன்பாடுகளுக்கும் பறக்கும் டாக்ஸிக்களைப் பயன்படுத்தத் திட்டமிட்டு வருகிறது இன்டர்குளோப் எண்டர்பிரைசஸ். ஆர்ச்சர் ஏவியேஷன் நிறுவனமானது ஏற்கனவே அமெரிக்கா விமானப் படைக்காக ஆறு பறக்கும் டாக்ஸிகளை வழங்குவதற்கான 142 மில்லியன் டாலர்கள் ஒப்பந்தத்தைப் பெற்றிருக்கிறது. மேலும், ஐக்கிய அரபு அமீரகத்திலும் பறக்கும் டாக்ஸி சேவையை அறிமுகப்படுத்தவிருப்பதாக கடந்த அக்டோபர் மாதம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.