
நேபாளத்திற்கு 15 டாடா கர்வ்வ் மின்சார கார்களை பரிசாக வழங்கியது இந்தியா; எதற்காக தெரியுமா?
செய்தி முன்னோட்டம்
நெருக்கமான இருதரப்பு உறவுகள் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான ஒத்துழைப்பு ஆகிய்வற்றைக் குறிக்கும் ஒரு நடவடிக்கையாக, இந்திய அரசு 15 டாடா கர்வ்வ் இவி மின்சார வாகனங்களை நேபாள அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளது.
இந்த அடையாளச் செயல், மே 16 முதல் 18, 2025 வரை காத்மாண்டுவில் நடைபெறும் "காலநிலை மாற்றம், மலைகள் மற்றும் மனிதகுலத்தின் எதிர்காலம்" என்ற தலைப்பில் நடைபெறும் சர்வதேச மாநாடான சாகர்மாதா சம்பாத்தை முன்னிட்டு வழங்கப்பட்டுள்ளது.
இந்த வாகனங்களை நேபாளத்திற்கான இந்திய தூதர் நவீன் ஸ்ரீவஸ்தவா, நேபாள வெளியுறவு அமைச்சர் டாக்டர் அர்சு ராணா தியூபாவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தார்.
இந்த முயற்சி இமயமலைப் பகுதியில் நிலையான வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் ஒத்துழைப்புக்கான இரு நாடுகளின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது.
சுயசார்பு பாரதம்
மின்சார வாகன துறையில் சுயசார்பு பாரதம்
டாடா மோட்டார்ஸால் தயாரிக்கப்பட்ட டாடா கர்வ்வ் இவி மின்சார வாகனம் ஆத்மநிர்பர் பாரத் எனப்படும் சுயசார்பு பாரதம் முயற்சியின் கீழ் மின்சார வாகனத் துறையில் இந்தியாவின் முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது.
இந்த வாகனம் ஏற்கனவே ராஷ்டிரபதி பவன் உட்பட மதிப்புமிக்க இந்திய நிறுவனங்களில் சேர்க்கப்பட்டுள்ளது.
எட்டு வகைகளில் கிடைக்கும் கர்வ்வ் இவி விலை ரூ.17.49 லட்சம் முதல் ரூ.21.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை உள்ளது மற்றும் பேட்டரி மாடலைப் பொறுத்து 502 கிமீ வரை ஓட்டுநர் வரம்பை வழங்குகிறது.
இந்நிலையில், நேபாளத்திற்கு இந்தியா இந்த மாடல் காரை வழங்கியுள்ள நடவடிக்கை தெற்காசியாவில் சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத தீர்வுகளை ஏற்றுக்கொள்வதை மேலும் ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.