இந்தியாவில் அதிகரிக்கும் EV மோகம்; ஒரு பார்வை
ஒரு தனியார் ஊடகத்தின் கணக்கெடுப்பின்படி, 90% இந்திய மக்கள், ஒரு EVயை பிரீமியம் விலையில் வாங்கத் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இந்திய நுகர்வோரின் பெருகும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக புதுமைகளை, விலை குறைந்த ஆட்டோமொபைல் தீர்வுகளை சந்தைக்குக் கொண்டு வருகின்றனர், உற்பத்தியாளர்கள். 2022 ஆண்டில், 2, 3 மற்றும் 4 சக்கர மின்சார வாகனங்கள் விநியோகம் 668% அதிகரித்துள்ளதாக ஆட்டோமொபைல் டீலர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அரசியல் சூழ்நிலைகள், எரிபொருள் விலை உயர்வு மற்றும் தட்பவெப்ப மாற்றங்கள் போன்ற காரணங்களால், மக்கள், IC (உள் எரிப்பு) வாகனங்களை விட EVக்களை விரும்புவதாக ஆய்வு தெரிவிக்கிறது. மேலும், மத்திய அரசாங்கத்தின் சலுகைகள், FAME-II, PMP போன்ற கொள்கைகள் EV வாகன விற்பனையை அதிகரிக்க உதவுகிறது.
இந்திய ஆட்டோமொபைல் எதிர்காலம் இனி எலக்ட்ரானிக் வாகனங்கள் தான்
தொழில்நுட்ப முன்னேற்றங்களின் வருகையால், இந்திய EVகள் ஒரு முறை சார்ஜ் செய்தால் சராசரியாக 100-170 KM வரை பயணிக்க முடியும். இதுவே இந்திய நுகர்வோரை EV வாங்குவதைக் கருத்தில் கொள்ளச் செய்யும் முக்கிய காரணியாகும். மேலும், டிஜிட்டல் கீ அன்லாக்கிங், குரல் கட்டுப்பாடு, ஜியோஃபென்சிங் எச்சரிக்கைகள், மற்றும் ஸ்மார்ட்போன்-உதவி கட்டுப்பாடு போன்ற அம்சங்கள் இந்திய வாடிக்கையாளர்களை ஈர்க்கின்றன. EVஇன் பராமரிப்பு செலவு குறைவே. எரிபொருளின் விலையை நோக்கும் போது, ஒருமுறை சார்ஜ் செய்வதற்கான செலவு 70%-80% குறைவாக உள்ளது. EV குறைவான பாகங்களைக் கொண்டிருப்பதால், பராமரிப்புச் செலவு 30-40% குறைக்கப்படுகிறது. இந்திய அரசாங்கத்தின் ஆய்வறிக்கைப்படி, E-2W வாகனங்கள் விற்பனை, 2021 அக்டோபரில் 19,264 ஆக இருந்தது, இந்தாண்டு, 76,657 ஆக அதிகரித்துள்ளது.