2024ல் க்ரெட்டா மற்றும் அல்கஸாரின் ஃபேஸ்லிப்ட்களை வெளியிடவிருக்கும் ஹூண்டாய்
இந்தியாவில் விற்பனையாகி வரும் தங்களுடைய எஸ்யூவி மாடல்களான க்ரெட்டா மற்றும் அல்கஸார் ஆகிய மாடல்களின் ஃபேஸ்லிப்ட் வெர்ஷன்களை 2024ல் வெளியிடத் திட்டமிட்டு வருகிறது ஹூண்டாய். இந்த ஃபேஸ்லிப்ட் வெர்ஷன்களை ஏற்கனவே இந்திய சாலைகளிலும் சோதனை செய்யத் துவங்கிவிட்டது ஹூண்டாய். 2015ம் ஆண்டு மிட்-டைஸ் எஸ்யூவி பிரிவில் அறிமுகப்படுத்தப்பட்ட க்ரெட்டா, இந்திய ஆட்டோமொபைலின் எஸ்யூவி சந்தையில் தற்போதும் கோலோச்சி வருகிறது. 2021ம் ஆண்டு, க்ரெட்டாவின் இரண்டாம் தலைமுறை மாடலை அடிப்படையாகக் கொண்ட மாடலாக அல்கஸாரை வெளியிட்டது ஹூண்டாய். இந்த மாடல்களுக்குப் போட்டியாக மாருதி சுஸூகி கிராண்டு விட்டார, ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸவாகன் டைகூன் ஆகிய மாடல்கள் சந்தையில் விற்பனையில் இருக்கின்றன.
ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் அல்கஸார்: என்னென்ன மாற்றங்களை எதிர்பார்க்கலாம்?
க்ரெட்டா மற்றும் அல்கஸார் ஆகிய இரண்டு மாடல்களின் வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்களில் பெரியளவில் மாற்றங்களை நாம் எதிர்பார்க்கலாம். புதிய எல்இடி விளக்குகள், மறுவடிவம் செய்யப்பட்ட பம்பர்கள் மற்றும் உட்பக்கம் புதிய டேஷ்போர்டு ஆகிய மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. க்ரெட்டாவில் பனோரமிக் சன்ரூஃப், ஆம்பியன்ட் லைட்டிங், ADAS பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட புதிய வசதிகளை நாம் எதிர்பார்க்கலாம். அதேபோல், அல்கஸாரில் டிசைன் மாற்றங்களுடன் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் வயர்லெஸ் சார்ஜர் உள்ளிட்ட வசதிகள் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு மாடல்களின் இன்ஜின் மற்றும் பவர்ட்ரெயின்களில் மாற்றம் இருக்காது என்றே தகவல் வெளியாகியிருக்கிறது. தற்போது பயன்பாட்டில் இருக்கும் அதே இன்ஜின் தேர்வுகளே புதிய வெர்ஷன்களிலும் பயன்படுத்தப்படவிருக்கிறது.