2025ஆம் ஆண்டுக்குள் 4 புதிய EVகளை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது ஹூண்டாய்
செய்தி முன்னோட்டம்
2025 நிதியாண்டின் கடைசி காலாண்டிற்குள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கிரெட்டா EV உட்பட நான்கு புதிய மின்சார வாகன (EV) மாடல்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று ஹூண்டாய் அறிவித்துள்ளது.
இந்தியாவின் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் (SEBI) தாக்கல் செய்யப்பட்ட ஹூண்டாய் நிறுவனத்தின் ஆரம்ப IPO ஆவணங்களில் இந்த லட்சியத் திட்டம் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது, ஹூண்டாய் நிறுவனம், இந்தியாவில் இரண்டு EV மாடல்களை விற்பனை செய்டு வருகிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் IONIQ 5 மற்றும் கோனா எலெக்ட்ரிக் ஆகிய EV மாடல்கள், முறையே ரூ.45 லட்சம் மற்றும் ரூ.24 லட்சம் விலைக்கு விற்கப்படுகிறது.
இந்தியா
EV விநியோகச் சங்கிலியை உள்ளூர்மயமாக்க ஹூண்டாய் முயற்சி
ஹூண்டாய், இந்தியாவில் அதன் EV மாடல்களின் விலையை போட்டித்தன்மைக்கு ஏற்ற வகையில் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
செல்கள், பேட்டரி பேக்குகள், பவர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டிரைவ் டிரெய்ன் போன்ற முக்கிய பாகங்களை உள்ளூரிலேயே உற்பத்தி செய்யவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அதன் EV உத்தியை ஆதரிக்க, ஹூண்டாய் தனது சென்னை உற்பத்தி ஆலையின் ஒரு பகுதியை ஹூண்டாய் மோட்டார் கம்பெனி(HMC) குழும நிறுவனமான MOBISக்கு EV பேட்டரிகளை அசெம்பிள் செய்வதற்காக குத்தகைக்கு எடுத்துள்ளது.
இந்த நடவடிக்கை பேட்டரி பேக்குகளுக்கான இறக்குமதி செலவுகளை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூடுதலாக, இந்தியாவில் உள்ளூர்மயமாக்கப்பட்ட பேட்டரி உற்பத்தி மற்றும் விநியோகத்தை எளிதாக்க 2024ஆம் ஆண்டில் எக்சைட் எனர்ஜி சொல்யூஷன்ஸுடன் ஒரு மூலோபாய ஒத்துழைப்பை முன்னெடுக்க ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.