70,000 முன்பதிவுகளைப் பெற்ற ஹூண்டாய் எக்ஸ்டர் காம்பேக்ட் எஸ்யூவி
செய்தி முன்னோட்டம்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தங்களுடைய புதிய காம்பேக்ட் எஸ்யூவியான எக்ஸ்டரை அறிமுகப்படுத்தியது ஜப்பானைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய்.
இந்தப் புதிய காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் அமோக வரவேற்பு அளித்திருக்கின்றனர். அறிமுகப்படுத்தப்பட்டு சில மாதங்களிலேயே 70,000 முன்பதிவுகளைப் பெற்றிருக்கிறது எக்ஸ்டர் காம்பேக்ட் எஸ்யூவி.
இந்தத் தகவலை அதிகாரப்பூர்வமாக பகிர்ந்திருக்கிறது ஹூண்டாய் நிறுவனம். மேலும், அதிகளவிலான வாடிக்கையாளர்களின் வரவேற்பைப் தொடர்ந்து எக்ஸ்டருக்கான காத்திருப்புக் காலம் 9 மாதங்களாக அதிகரித்திருக்கிறது.
அதிகரித்திருக்கும் இந்த டிமாண்டை ஈடு செய்ய, புதிய எஸ்யூவியின் தயாரிப்பை 30% வரை அதிகரிக்கத் திட்டமிட்டிருக்கிறது ஹூண்டாய்.
ஹூண்டாய்
ஹூண்டாய் எக்ஸ்டர் காம்பேட் எஸ்யூவி:
புதிய எக்ஸ்டரில் 83hp பவர் மற்றும் 114Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய, நான்கு சிலிண்டர்கள் கொண்ட, 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினைக் கொடுத்திருக்கிறது ஹூண்டாய். மேலும், இந்த மாடலின் CNG வேரியன்ட் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம்.
இந்தியாவில் ரூ.5.99 லட்சம் முதல் ரூ.9.32 லட்சம் வரையிலான விலைகளில் புதிய எக்ஸ்டரை விற்பனை செய்து வருகிறது ஹூண்டாய். ஐந்து ட்ரிம்களில் விற்பனை செய்யப்பட்டு வரும் எக்ஸ்டரின் டாப் எண்டையே வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புவதாகத் தெரிவித்திருக்கிறது ஹூண்டாய்.
முன்னதாக ஹூண்டாய் நிறுவனம் மாதத்திற்கு 6,000 எக்ஸ்டர் மாடல் கார்களை தயாரித்து வந்த நிலையில், தற்போது டிமாண்டு அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து மாதத்திற்கு 8,000 கார்களை உற்பத்தி செய்யத் திட்டமிட்டிருக்கிறது.