'விடாமுயற்சி' படப்பிடிப்பில் பயன்படுத்தப்படும் 'ஹம்மர் H2' மாடல் காரில் என்ன ஸ்பெஷல்?
இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான துணிவு திரைப்படத்திற்குப் பிறகு, இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில், 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார் நடிகர் அஜித் குமார். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பானது தற்போது அஸர்பெய்ஜானில் நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கின்றன. மேலும், இந்தப் படப்பிடிப்பிலிருந்து சில புகைப்படங்களும் இணையத்தில் கசிந்திருக்கின்றன. அந்தப் புகைப்படங்களில், திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு 'ஹம்மர் H2' காரை பயன்படுத்தி வருவது தெரிய வந்துள்ளது. மேலும், இந்தக் காரில் வழக்கமான டயர்கள் இன்றி ஸ்லிக் டயர்களைப் பயன்படுத்தி படமாக்கி வருகிறார்கள். இந்த டயர்களானது, சாகசங்களுக்குப் பயன்படுத்தும் கார்களிலேயே பொருத்தப்படும். எனவே, விடாமுயற்சியில் நிச்சயம் ஒரு கார் சாகசக் காட்சி இடம் பெறும் என நாம் எதிர்பார்க்கலாம்.
ஹம்மர் H2:
அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனமே ஹம்மர் கார்களை தயாரித்து விற்பனை செய்து வந்தது. 2009ம் ஆண்டு இந்நிறுவனம் திவால் அறிவிப்பை வெளியிட்டதைத் தொடர்ந்து, ஹம்மர் H2 கார் மாடலின் தயாரிப்பும் நிறுத்தப்பட்டது. 2009ம் ஆண்டு வரை விற்பனையில் இருந்த ஹம்மர் H2 மாடல் காரானது ஒரு முழுமையான ஆஃப்-ரோடு எஸ்யூவியாகும். ஐந்து டோர்களுடன் பிரம்மாண்டத் தோற்றத்தைக் கொண்டிருக்கும் இந்தக் கார்கள், இந்தியாவிலும் மிகப் பிரபலம். ரூ.75 லட்சம் விலையில் அப்போது விற்பனை செய்யப்பட்டு வந்த இந்தக் காரை இந்தியாவில், மகேந்திர சிங் தோனி, ஹர்பஜன் சிங் ஆகியோர் வாங்கி தங்களுடைய கேரேஜில் வைத்திருக்கின்றனர். உதயநிதி ஸ்டாலின் கூட இதற்கு அடுத்த மாடலான ஹம்மர் H3 மாடலை வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.