2024-ல் இந்தியாவில் ஹோண்டாவின் பைக் லைன்அப்
ஜப்பானைச் சேர்ந்த பைக் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா, இந்தாண்டு இந்தியாவில் பல்வேறு புதிய மற்றும் அப்டேட் செய்யப்பட்ட பைக்குகளை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது. 2024-ல் ஹோண்டாவின் லைன்அப்பில் உள்ள பைக்குகள் என்னென்ன? பார்க்கலாம். இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களில் ஒன்றான ஆக்டிவாவின் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஒன்றை இந்தாண்டு தொடக்கத்திலேயே வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது ஹோண்டா. அதனைத் தொடர்ந்து, ராயல் என்ஃபீல்டு மீட்டியார் 350 மற்றும் யெஸ்டி ரோட்ஸ்டர் ஆகிய பைக்குகளுக்குப் போட்டியாக, CB350-யை அடிப்படையாகக் கொண்ட புதிய க்ரூஸர் மாடல் பைக் ஒன்றை இந்தாண்டு இந்திய பைக் சந்தையில் களமிறக்கத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்.
ஹோண்டாவின் புதிய அறிமுகங்கள்:
இந்தியாவின் மிடில் வெயிட் அட்வென்சர் பைக் பிரிவில், 471சிசி லிக்விட் கூல்டு, பேரலல் ட்வின் இன்ஜினைக் கொண்ட NX500 பைக் மாடலை வெளியிடம் திட்டத்தையும் கைவசம் வைத்திருக்கிறது ஹோண்டா. ரூ.7.5 லட்சம் விலையில் இந்த பைக் இந்தியாவில் வெளியிடப்படலாம் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் CB650R மற்றும் CBR650R ஆகிய பைக் மாடல்களின் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷனை கடந்தாண்டு நடைபெற்ற EICMA 2024 நிகழ்வில் அறிமுகப்படுத்தியிருந்தது ஹோண்டா. அந்த அப்டேட்டட் வெர்ஷன்களை இந்தாண்டு இந்தியாவிலும் அந்நிறுவனம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.