
'ஹைனஸ் CB350' மற்றும் 'CB350RS' பைக்குகளை ரீகால் செய்த ஹோண்டா
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் ஹைனஸ் CB350 மற்றும் CB350RS மாடல்களை 'ரீகால்' (Recall) செய்திருக்கிறது ஜப்பானைச் சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனமான ஹோண்டா.
பொதுவாக ஒரு பைக் அல்லாத காரின் தயாரிப்பின் போதே ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டால், அதனை சரிசெய்த கொடுக்க குறிப்பிட்ட மாடல்களை ரீகால் செய்வது ஆட்டோமொபைல் நிறுவனங்களின் வழக்கம்.
அந்த வகையில் அக்டோபர் 2020 முதல் ஜனவரி 2023 வரை உற்பத்தி செய்யப்பட்ட மாடல்களில் உள்ள பின்பக்க ஸ்டாப் லைட் ஸ்விட்ச் பிரச்சினையை சரிசெய்யவும், அக்டோபர் 2020 முதல் டிசம்பர் 2021 வரை உற்பத்தி செய்யப்பட்ட மாடல்களில் உள்ள பேக் ஆங்கிள் சென்சார் பிரச்சினையை சரிசெய்யவும் தற்போது ரீகால் அழைப்பை வெளியிட்டிருக்கிறது ஹோண்டா.
ஹோண்டா
ஏன் இந்தப் பிரச்சினைகள்:
பின்பக்க ஸ்டாப் லைட்டுகளின் உற்பத்தியின் போது, அதில் பயன்படுத்திய ரப்பர் பாகங்களை சரியான முறையில் உறபத்தி செய்யாததால், அதில் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் உள்ளே புகுந்து துருப்பிடிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
அதே போல், பேக் ஆங்கிள் சென்சாரின் மோல்டிங் சரியாகச் செய்யப்படாததால், அதிலும் தண்ணீர் புகுந்து சென்சார் சரியாக வேலை செய்யாமல் போவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
எனவே, இந்தப் பிரச்சினைகளைச் சரி செய்து கொடுக்க வாடிக்கையாளர்களுக்கு ரீகால் அழைப்பை விடுத்திருக்கிறது ஹோண்டா.
டிசம்பர் இரண்டாம் வாரம் தொடங்கி, ஹோண்டாவின் பிக்விங் டீலர்ஷிப்களில் இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக புதிய பாகங்களை வாடிக்கையாளர்கள் மாற்றிக் கொள்ளலாம். வாரண்டி காலம் முடிந்திருந்தாலும், வாடிக்கையாளர்கள் இந்த பழுதை மட்டும் கூடுதல் கட்டணமின்ற சரிசெய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோண்டா
ஹோண்டா CB350:
மேற்கூறிய CB350 லைன்அப்பிலேயே சமீபத்தில் புதிய பைக் ஒன்றை ஹோண்டா அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
CB350 என்ற பெயரில் அறிமுகமாகியிருக்கும் அந்த பைக்கில், 20.78hp பவர் மற்றும் 29.4Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய, 348சிசி ஏர்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜினைப் பயன்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம்.
மேலும், 5 ஸ்பீடு கியர்பாக்ஸூடன், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச்சும் இந்தப் புதிய மாடலில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் புதிய CB350 மாடலின், DLX வேரியன்டை ரூ.2 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும், DLX ப்ரோ வேரியன்டை ரூ.2.18 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும் வெளியிட்டது ஹோண்டா. ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 350 மாடலுக்கான நேரடிப் போட்டியாக இந்த பைக்கை வெளியிட்டது அந்நிறுவனம்.