அடுத்த மாதம் அமெரிக்காவில் புதிய ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தும் ஹோண்டா
இந்தியாவில் முன்னணி பைக் தயாரிப்பு விற்பனை நிறுவனங்களுள் ஒன்றாக இயங்கி வருகிறது ஹோண்டா. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களில் முன்னணியில் இருக்கிறது ஹோண்டாவின் ஆக்டிவா. இந்நிலையில், இந்த ஆக்டிவா ஸ்கூட்டர் மாடலின் எலெக்ட்ரிக் வடிவம் ஒன்றை உருவாக்கி வந்தது ஹோண்டா. அந்த ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை, வரும் ஜனவரி மாதம் 9ம் தேதி அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெறவிருக்கும் Consumer Electronics Show-வில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம். 2040ம் ஆண்டிற்குள் முழுமையான எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமாக மாறத் திட்டமிட்டிருக்கிறது ஹோண்டா. எலெக்ட்ரிக் பைக் விற்பனையில் தங்களுடைய இலக்கை எட்ட இந்த ஆக்டிவா எலெக்ட்ரிக் மாடல் அந்நிறுவனத்திற்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்:
நிலையான பேட்டரியுடன், அதிகபட்சமாக மணிக்கு 50 கிமீ வேகத்தில் செல்லும் திறனுடன் இந்தப் புதிய ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஹோண்டா வடிவமைத்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வேகம் மற்றும் செயல்திறனை விட, ரேஞ்சுக்கு ஹோண்டா அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. நிலையான பேட்டரி கொண்ட ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுகத்துக்குப் பிறகு, மாற்றிக் கொள்ளக்கூடிய பேட்டரி வசதி கொண்ட மற்றொரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் CES நிகழ்வில் அறிமுகமான பிறகு, 2024ன் பிறபாதியில் இந்த ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.