மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது ஹீரோ பேஷன் ப்ளஸ்
இந்தியாவில் BS6 விதிமுறைகள் அமல்படுத்தப்பட்ட போது, அப்போது விற்பனையில் இருந்த பேஷன் ப்ளஸ் பைக்கின் விற்பனையை நிறுத்தியது ஹீரோ. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அப்டேட் செய்யப்பட்ட இன்ஜினுடன் அந்த பைக்கை மீண்டும் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கிறது அந்நிறுவனம். பேஷன் பிளஸ்ஸின் இரண்டு வீல்களிலும் 130மிமீ டிரம் பிரேக்குகள் மற்றும் ட்யூப்லெஸ் டயர்களைப் பயன்படுத்தியிருக்கிறது ஹீரோ. மூன்று கலர் ஆப்ஷன்களில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த மாடலில், செல்ஃப் ஸ்டார்ட், டிஜிட்டல் அனலாக் மற்றும் யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் ஆகிய வசதிகளை ஸ்டாண்டர்டாகவே வழங்கியிருக்கிறது ஹீரோ நிறுவனம். ஹோண்டா ஷைன் மற்றும் பஜாஜ் பிளாட்டினா ஆகிய பைக்குகளுக்குப் போட்டியாக விற்பனை செய்யப்படவிருக்கிறது ஹீரோ பேஷன் ப்ளஸ்.
இன்ஜின் மற்றும் விலை:
புதிய பேஷன் பிளஸ்ஸில், BS6-ன் இரண்டாம் கட்ட விதிமுறைகள் மற்றும் E20-க்கு ஏற்ற வகையில் அப்டேட் செய்யப்பட்ட 97.2சிசி, ஏர் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜினைப் பயன்படுத்தியிருக்கிறது ஹீரோ. இந்த இன்ஜினானது, 8hp பவர் மற்றும் 8.05Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கிறது. ஹீரோ நிறுவனம் தங்களுடைய 100சிசி லைன்அப்பில் இதே இன்ஜினடன் இத்துடன் ஐந்து பைக்குகளை விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், i3s ஸ்டார்ட்/ஸ்டாப் தொழில்நுட்பத்தையும் இந்த புதிய பேஷன் ப்ளஸ்ஸில் வழங்கியிருக்கிறது ஹீரோ. இந்தியாவில் ரூ.76,065 எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்திருக்கும் இந்த பேஷன் ப்ளஸ் தான் ஹீரோவின் 100சிசி லைன்-அப்பிலேயே மிகவும் விலை உயர்ந்த பைக்காகவும் விற்பனை செய்யப்படவிருக்கிறது.