ரெய்டர் மற்றும் பல்சர் மாடல்களுக்குப் போட்டியாக ஹீரோவின் புதிய 125சிசி பைக்
கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தியாவில் அப்டேட் செய்யப்பட்ட எக்ஸ்ட்ரீம் 160R பைக்கை வெளியிட்டது ஹீரோ நிறுவனம். இன்னும் சில புதிய மாடல்களையும், அப்டேட் செய்யப்பட்ட மாடல்களையும் இந்தியாவில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம். இந்நிலையில், ஹீரோவின் புதிய 125சிசி பைக்கின் ஸ்பை படங்கள் தற்போது இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. 125சிசி செமக்மெண்டில் கம்யூட்டர் பைக்குகளை மட்டுமே தற்போது விற்பனை செய்து வருகிறது ஹீரோ. ஆனால், போட்டி நிறுவனங்களான டிவிஎஸ் மற்றும் பஜாஜ் ஆகிய நிறுவனங்கள் ரெய்டர் 125 மற்றும் பல்சர் 125 ஆகிய ஸ்போர்ட்டியான பைக்குகளையும் 125சிசி செக்மெண்டில் விற்பனை செய்து வருகின்றன. அந்த பைக்குகளுக்குப் போட்டியாக புதிய 125சிசி பைக்கை இந்திய சாலைகளில் சோதனை செய்து வருகிறது ஹீரோ.
ஹீரோவின் 125சிசி ஸ்போர்ட்டி கம்யூட்டர்:
ஸ்பை படங்களில் தங்களை பைக்கின் டிசைன் முழுவதையும் ஹீரோ நிறுவனம் மறைத்திருக்கிறது. எனினும், அதன் வடிவத்தை வைத்துப் பார்க்கும் போது கவாஸாகி Z1000 பைக்கின் சாயலைக் கொண்டிருக்கிறது இந்த புதிய 125சிசி பைக். மேற்கூறிய ரெய்டர் 125 மற்றும் பல்சர் 125 ஆகிய பைக்குகள் ஜென் Z தலைமுறையைக் கவர்வதற்காகவே வெளியிடப்பட்ட பைக் மாடல்கள். ஹீரோவும் புதிய தலைமுறையை கவர்வதற்காகவே இந்த பைக்கை களமிறக்கவிருக்கிறது. எல்இடி லைட்டுகள், ஸ்பிளிட் சீட், முன்பக்கம் டிஸ்க் பிரேக், பின்பக்கம் டிரம் பிரேக் மற்றும் சிங்கிள் சிலிண்டர் ஏர்-கூல்டு 125சிசி இன்ஜின் ஆகியவை பயன்படுத்தப்பட்டிருப்பதை ஸ்பை படங்களின் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. ரூ.90,000 விலைக்குள் இந்த பைக் மாடலானது இந்தியாவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.