95,000 ரூபாய்க்கு இந்தியாவில் அறிமுகமானது ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R மோட்டார் பைக்
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், எக்ஸ்ட்ரீம் 125R என்ற புதிய மோட்டார் பைக்கை 'ஹீரோ வேர்ல்ட் 2024' இல் அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ. 95,000 என்ற ஆரம்ப விலையுடன் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் எக்ஸ்ட்ரீம் 125R மோட்டார் பைக்கானது 125cc கம்யூட்டர் மார்க்கெட்டின் உயர்நிலைப் பிரிவில் தற்போது முதன்மையாக உள்ளது. மேலும், ஹீரோ மோட்டோகார்ப்பின் இந்த மோட்டார் பைக் டிவிஎஸ் ரைடர் 125க்கு போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடலின் புதிய வடிவமைப்பு, ஹீரோவின் வழக்கமான கம்யூட்டர் மோட்டார்சைக்கிள்களில் இருந்து வெகுவாக வேறுபட்டதாகும். கூர்மையான ஸ்டைலிங்கை கொண்டுள்ள எக்ஸ்ட்ரீம் 125Rரின் புதிய மாறுபட்ட ஹெட்லேம்ப் அதற்கு தனித்துவமான தோற்றத்தை அளிக்கிறது.
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125Rரின் வடிவமைப்பு மற்றும் அம்சங்கள்
எக்ஸ்ட்ரீம் 125Rரின் தனித்துவமான லோ-செட் ஹெட்லேம்ப்பிற்கு பக்கத்திலேயே எல்இடி டர்ன் இண்டிகேட்டர்களும் பொறுத்தப்பட்டுள்ளன. எக்ஸ்ட்ரீம் 125Rக்கு ஸ்போர்ட்டி தோற்றத்தை கொடுக்கும் நோக்கத்தோடு இருபுறமும் எஸ்ட்டென்ஷன்களை கொண்ட பெட்ரோல் டேங்க், ஸ்பிலிட்-ஸ்டைல் இருக்கைகள் மற்றும் ஸ்பிலிட் கிராப் ரெயில்கள் ஆகியவை வடிவமைக்கப்ட்டுள்ளன. கூடுதலாக, பல்வேறு தகவல்களைக் காட்டும் எல்சிடி பேனலுடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலும் எக்ஸ்ட்ரீம் 125Rஇல் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய 125சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு எஞ்சினுடன் 11.5எச்பி பவரையும், 10.5என்எம் டார்க்கையும் எக்ஸ்ட்ரீம் 125R வழங்குகிறது. இந்தியாவில், ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125Rரின் IBS பதிப்பு ரூ.95,000 விலைக்கு விற்கப்படுகிறது. அதே நேரத்தில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R ABS மாறுபாட்டின் விலை ரூ. 99,500(எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.