புதிய அப்டேட் செய்யப்பட்ட கிளாமர் பைக்கை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது ஹீரோ
இந்தியாவில் 2023ம் ஆண்டுக்கான அப்டேட் செய்யப்பட்ட கிளாமர் கம்யூட்டர் பைக்கை வெளியிட்டிருக்கிறது ஹீரோ நிறுவனம். டிரம் பிரேக்குகள் மற்றும் டிஸ்க் பிரேக்குகளைக் கொண்டு இரண்டு வேரியன்ட்களாக வெளியிடப்பட்டிருக்கிறது கிளாமர். புதிய கிளாமரில் பல்வேறு வகையில் அப்டேட்களை மேற்கொண்டிருக்கிறது ஹீரோ. புதிய டேங்க் ஷ்ரௌடுகளைக் கொண்டு, மூன்று புதிய நிறங்களில் கிளாமரை வெளியிட்டிருக்கிறது ஹீரோ. புதிய கிளாமரின் சீட்டை மறுவடிவமைப்பு செய்திருப்பதுடன், அதன் உயரத்தையும் குறைத்திருக்கிறது ஹீரோ. ரைடர் சீட்டின் அளவை 8மிமீ அளவும், பில்லியன் சீட்டின் அளவை 17மிமீ அளவும் குறைத்திருக்கிறது. டிசைன் வகையில், பின்பக்கம் செக்கர்டு ஸ்ட்ரைப்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. இத்துடன், USB சார்ஜிங் போர்ட் மற்றும் புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரும் அப்டேட் செய்யப்பட்ட கிளாமரில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
2023 ஹீரோ கிளாமர்: இன்ஜின் மற்றும் விலை
புதிய கிளாமரில், 10.68hp பவர் மற்றும் 10.6Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய, சிங்கிள் சிலிண்டர் கொண்ட, ஏர் கூல்டு 125சிசி இன்ஜின் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த இன்ஜினை தற்போது BS6 இரண்டாம் நிலை தரக்கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு ஏற்ப மாற்றியிருக்கிறது ஹீரோ. மேலும், E20 எரிபொருளையும் இந்த இன்ஜினில் பயன்படுத்த முடியும். இத்துடன் கூடுதல் எரிபொருள் சிக்கனத்திற்காக, தங்களுடைய i3S ஐடில் ஸ்டார்ட்/ஸ்டாப் தொழில்நுட்பத்தை புதிய கிளாமரிலும் வழங்கியிருக்கிறது ஹீரோ. மேலும், புதிய கிளாமரானது 63கிமீ மைலேஜ் வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், புதிய கிளாமரின் டிரம் பிரேக் கொண்ட வேரியன்டை ரூ.82,348 விலையிலும், டிஸ்க் பிரேக் கொண்ட வேரியன்டை ரூ.84,348 விலையிலும் வெளியிட்டிருக்கிறது ஹீரோ.