நவம்பர் மாதம் நான்காம் தலைமுறை சூப்பர்பை அறிமுகப்படுத்தும் ஸ்கோடா
அடுத்த தலைமுறை சூப்பர்ப் மாடலை வரும் நவம்பரில் அறிமுகப்படுத்தவிருப்பதை உறுதி செய்திருக்கிறது ஸ்கோடா. இந்த புதிய ஸ்கோடா சூப்பர்பானது நான்காம் தலைமுறை மாடலாக அறிமுகப்படுத்தவிருக்கிறகு. மேலும், முதல் ஸ்கோடா சூப்பர்பை வெளியிட்டு 90 ஆண்டுகளை நிறைவடைவதை முன்னிட்டு, நவம்பர் மாதத்தைத் தேர்வு செய்திருக்கிறது ஸ்கோடா. புதிய சூப்பர்பின் தொழில்நுட்பம், டிசைன் மற்றும் இன்ஜின் என அனைத்தையும் மேம்படுத்தியிருக்கிறது ஸ்கோடா. அத்துடன் நல்ல இடவசதியைக் கொண்ட காராகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது புதிய ஸ்கோடா சூப்பர்ப். மேலும், முந்தைய ஸ்கோடா சூப்பர்ப் மாடல்களைப் போல எஸ்டேட் மற்றும் செடான் ஆகிய இரு வடிவிலும், புதிய சூப்பர்பை விற்பனை செய்யவிருக்கிறது ஸ்கோடா.
ஸ்கோடா சூப்பர்ப்: இன்ஜின்
இதற்கு முன்னர் மைல்ட்-ஹைபிரிட் சூப்பர்பானது விற்பனை செய்யப்படவில்லை. தற்போது, 1.5 லிட்டர் TSI இன்ஜின் கொண்ட மைல்ட்-ஹைபிரிட் மாடல் ஒன்றையும் அறிமுகப்படுத்தவிருக்கிறது ஸ்கோடா. அத்துடன், 204PS பவரை வெளிப்படுத்தக்கூடிய, நான்கு சிலிண்டர்கள் கொண்ட, 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் கொண்ட மாடல் ஒன்றும், ஒட்டுமொத்தமாக 204PS பவரை உற்பத்தி செய்யக்கூடிய, 1.5 லிட்டர் TSI பெட்ரோல் இன்ஜின் கொண்ட ப்ளக்-இன் ஹைபிரிட் மாடல் ஒன்றும் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. இந்த ப்ளக்-இன் ஹைபிரிடில் முந்தை மாடலை விட கூடுதலாக 25.7kWh பேட்டரி கொடுக்கப்படவிருக்கிறது. ஹைபிரிட் மாடல்களில் 6-ஸ்பீடு DSG கியர்பாக்ஸும், பிற மாடல்களில் 7-ஸ்பீடு கியர்பாக்ஸூம் கொடுக்கப்படவிருக்கின்றன. இந்தியாவில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் கொண்ட மாடலே அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.