ஏஐ தொழில்நுட்பத்தால் தரத்தில் குறைபாடு! அனுபவமிக்க சீனியர் இன்ஜினியர்கள் மீண்டும் வேலைக்கு அழைத்த ஃபோர்டு நிறுவனம்
செய்தி முன்னோட்டம்
அதிநவீன செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மூலமாகத் தனது கார்களின் தரக் குறைபாடுகளை முழுமையாக சரிசெய்துவிடலாம் என்று நம்பிய அமெரிக்காவின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு தற்பொழுது ஒரு முக்கிய பின்னடைவை சந்தித்துள்ளது. பல தசாப்த கால மனித பொறியியல் அனுபவம் இல்லாமல், வெறும் ஏஐ மற்றும் தானியங்கி அமைப்புகளை மட்டுமே நம்பியதால் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை என்று இந்நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. இதன் காரணமாக, தங்களது ஏஐ கருவிகளுக்கு சரியான பயிற்சி அளிக்கவும், இளம் ஊழியர்களுக்கு வழிகாட்டவும் நூற்றுக்கணக்கான தங்களது பழைய மூத்த இன்ஜினியர்களை ஃபோர்டு நிறுவனம் மீண்டும் வேலைக்கு அமர்த்தியுள்ளது.
தவறாகக் கணிப்பு
ஏஐ தொழில்நுட்பத்தின் எல்லையைத் தவறாகக் கணித்த ஃபோர்டு நிர்வாகம்
ப்ளூம்பெர்க் வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சுமார் 350 க்கும் மேற்பட்ட அனுபவமிக்க மூத்த இன்ஜினியர்களை ஃபோர்டு நிறுவனம் மீண்டும் பணிக்குக் கொண்டுவந்துள்ளது. இது குறித்துப் பேசிய ஃபோர்டின் வாகன வன்பொருள் பொறியியல் பிரிவின் துணைத் தலைவர் சார்லஸ் பூன், வெறும் ஏஐ தொழில்நுட்பத்தையும், வடிவமைப்புத் தேவைகளையும் மட்டுமே உள்ளிட்டால் தரமான தயாரிப்பு கிடைத்துவிடும் என்று தாங்கள் தவறாகக் கணக்கிட்டுவிட்டதாகத் தெரிவித்தார். ஏஐ என்பது ஒரு சிறந்த கருவிதான் என்றாலும், அதற்கு நாம் அளிக்கும் பயிற்சித் தரவுகளின் அளவிற்கே அது துல்லியமாக செயல்படும் என்றும் அவர் விளக்கினார்.
மூத்த இன்ஜினியர்கள்
"கிரே பேர்டு" (Gray beard) இன்ஜினியர்களின் மறுவருகை
ஃபோர்டு நிறுவனத்திற்குள் 'கிரே பேர்டு' (Gray beard) என்று அழைக்கப்படும் இந்த மூத்த நிபுணர்கள், தற்பொழுது தொழிற்சாலை உற்பத்தித் தளத்திற்குள் கார்கள் செல்லும் முன்பே அதன் தரக் குறைபாடுகளைக் கண்டறியும் முக்கியப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்துப் பேசிய நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி (COO) குமார் கல்ஹோத்ரா, பிரச்சனைகள் வந்த பிறகு அதை சரிசெய்யும் பழைய முறையிலிருந்து மாறி, பிரச்சனை உருவாவதற்கு முன்பே அதைத் தடுக்கும் உத்தியை நோக்கித் தாங்கள் நகர்வதாகக் குறிப்பிட்டார். இந்த மூத்த இன்ஜினியர்களே தங்களது நிறுவனத் திருப்பத்தின் மையப்புள்ளியாக விளங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஏஐ தொழில்நுட்பம்
ஏஐ தொழில்நுட்பத்தை முழுமையாகக் கைவிடாத ஃபோர்டு
பழைய இன்ஜினியர்களை மீண்டும் கொண்டுவந்தாலும், ஃபோர்டு நிறுவனம் ஏஐ தொழில்நுட்பத்தை முழுமையாகக் கைவிடவில்லை. மாறாக, இந்த அனுபவமிக்க இன்ஜினியர்களின் தரவுகளைக் கொண்டு ஏஐ சிஸ்டம்களை மேலும் புத்திசாலியாக மாற்றி வருகிறது. மென்பொருள் நம்பகத்தன்மையை மேம்படுத்த 40 பேர் கொண்ட பிரத்யேகக் குழு உருவாக்கப்பட்டுள்ளதுடன், பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளில் வாகன மென்பொருளை சோதிக்க 1,00,000க்கும் மேற்பட்ட ஏஐ அடிப்படையிலான சோதனைகளும் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன. இந்த மனித மற்றும் ஏஐ கூட்டு உத்தியால் ஜேடி பவர் தரவரிசையில் ஃபோர்டு நிறுவனம் தற்பொழுது முதலிடத்தைப் பிடித்து சாதித்துள்ளது.