நகரப் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறதா ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 650?
தயாரிப்பு நிலையில் இருக்கக்கூடிய 'ஷாட்கன் 650' (Shotgun 650) பைக் மாடலை சமீபத்தில் அறிமுகப்படுத்தியிருந்தது ராயல் என்ஃபீல்டு நிறுவனம். இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ராயல் என்ஃபீல்டின் மீட்டியார் 650 மாடலின் மறுவடிமைப்பு செய்யப்பட்ட மாடல் போலவே இருக்கிறது இந்தப் புதிய ஷாட்கன் 650. மீட்டியார் 650 மாடலானது, நீண்ட தூரப் பயணங்களுக்கு ஒத்துழைக்கும் வகையிலான க்ரூஸர் வகை மாடலாக விற்பனையாகி வரும் நிலையில், இந்த ஷாட்கன் 650-யை நகரத்திற்குள் பயன்படுத்தும் வகையில் பாபர் ஸ்டைலில் உருவாக்கியிருக்கிறது அந்நிறுவனம். சரி, எது இந்த ஷாட்கன் 650-யை சிறந்த சிட்டி மாடலாக்குகிறது?
ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 650:
நகரத்திற்குள் எளிதாக பயன்பாட்டை அளிக்கும் வகையில் 1,465மிமீ வீல்பேஸ், 140மிமி கிரவுண்டு கிளியரன்ஸ் மற்றும் 25.3 டிகிரி ஸ்டீயரிங் ரேக் ஆங்கிள் என்ற குறைவான அளவுகளில் அமைத்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு. ஓட்டுநர் பாதுகாப்பிற்காக ஃப்ளோட்டிங் பிரேக் காலிப்பர்கள் மற்றும் பெரிய டிஸ்க் பிரேக்குகளை இரண்டு வீல்களிலும் கொடுத்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு. இத்துடன் டூயல் சேனல் ஏபிஎஸ் வசதியும் உண்டு. முன்பக்கம் 43மிமீ ஷோவா பிக் பிஸ்டன் சஸ்பென்ஷன் செட்டப்பும், பின்பக்கம் டூயல் ஷாக் அப்சார்பர் சஸ்பென்ஷன் செட்டப்பும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. முக்கியமாக, சூப்பர் மீட்டியார் 650 மற்றும் இன்டர்செப்டார் 650 ஆகிய மாடல்களில் பயன்படுத்தப்பட்ட, 648சிசி, ஏர் மற்றும் ஆயில் கூல்டு, பேரலல் ட்வின் இன்ஜினை இந்த ஷாட்கன் 650-யிலும் கொடுத்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு.