Loading...
கோவையின் கரி மோட்டார் ஸ்பீட்வே டிராக்கில் சீறிப்பாயும் கார்கள்! எஃப்4 இந்தியன் சாம்பியன்ஷிப் 2026 தொடக்கம்
ஃப்4 இந்தியன் சாம்பியன்ஷிப் 2026 கோவையில் தொடக்கம்

கோவையின் கரி மோட்டார் ஸ்பீட்வே டிராக்கில் சீறிப்பாயும் கார்கள்! எஃப்4 இந்தியன் சாம்பியன்ஷிப் 2026 தொடக்கம்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 12, 2026
05:50 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில், 2026 ஆம் ஆண்டிற்கான இந்தியன் ரேசிங் ஃபெஸ்டிவல் போட்டிகள் கோயம்புத்தூரில் உள்ள கரி மோட்டார் ஸ்பீட்வே தளத்தில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன. சர்வதேச எஃப்ஐஏ அமைப்பின் சான்றிதழ் பெற்ற எஃப்4 எனும் ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் பந்தயங்களுடன் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் இந்த கார் பந்தய போட்டி நடைபெறுகிறது. இந்த ஆண்டின் எஃப்4 சீசன் மொத்தம் ஆறு சுற்றுகளாக நடைபெறவுள்ளதுடன், வளரும் இளம் வீரர்களுக்கு சர்வதேசத் தரத்திலான பந்தய அனுபவத்தை வழங்கவுள்ளது.

அணிகள்

இளம் வீரர்களின் களம் மற்றும் சர்வதேச அணிகள்

கார்ட்டிங் பந்தயங்களில் இருந்து ஒற்றை இருக்கை கொண்ட கார் பந்தயங்களுக்கு மாற விரும்பும் இளம் வீரர்களுக்கு இந்த எஃப்4 தொடர் மிகச்சிறந்த வாய்ப்பாகக் கருதப்படுகிறது.

இந்த 2026 பந்தயத் தொடரில் இந்தியா, சிங்கப்பூர், அமெரிக்கா, லண்டன், தென்னாப்பிரிக்கா உட்பட 8 நாடுகளை சேர்ந்த 14 திறமையான வீரர்கள் 8 அணிகளின் சார்பாகப் போட்டியிடுகின்றனர்.

இதில் ஹைதராபாத் பிளாக்பேர்ட்ஸ் அணியின் சார்பாகக் களம் இறங்கும் இந்திய வீரர் புவன் போனு, ஃபார்முலா 1 பந்தயங்களை எட்டுவதே தனது முதன்மை இலக்கு எனத் தெரிவித்துள்ளார்.

ரேசிங் லீக்

அக்டோபரில் தொடங்கும் இந்தியன் ரேசிங் லீக்

எஃப்4 போட்டிகளைத் தொடர்ந்து, இந்தியன் ரேசிங் லீக் தொடரானது அக்டோபர் 24 மற்றும் 25 தேதிகளில் சென்னை மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்கியூட்டில் தொடங்குகிறது.

இந்த லீக் தொடரில் திரைப்பட நடிகர்கள் கிச்சா சுதீப், ஜான் ஆபிரகாம், நாக சைதன்யா, அர்ஜுன் கபூர் மற்றும் முன்னாள் இந்தியக் கிரிக்கெட் கேப்டன் சௌரவ் கங்குலி ஆகியோரின் 6 அணிகள் பங்கேற்கின்றன.

மொத்தம் நான்கு சுற்றுகளாக நடைபெறவுள்ள இந்த பந்தயங்களில் இந்திய மற்றும் சர்வதேச பந்தய வீரர்கள் இணைந்து களம் காணவுள்ளனர்.

ADVERTISEMENT

நேரலை

நவி மும்பை ஸ்ட்ரீட் சர்க்கியூட் மற்றும் நேரலை விவரங்கள்

இந்த 2026 சீசனின் மிகப்பெரிய திருப்புமுனையாக டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள இறுதிச் சுற்றுப் போட்டிகள் புதிய நவி மும்பை ஸ்ட்ரீட் சர்க்கியூட்டில் நடத்தப்படவுள்ளன.

பெருநகர்ப்புற சாலைகளிலேயே நேரடியாகப் பந்தயங்களை நடத்தி போட்டிகளை சுவாரஸ்யமாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நடைபெறும் இந்த கார் பந்தயங்களை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசைகளிலும், ஜியோ ஹாட்ஸ்டார் செயலியிலும் தமிழ் மொழியிலேயே நேரடியாகக் கண்டு ரசிக்கலாம்.

ADVERTISEMENT