2026-27 நிதியாண்டில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 13% ஆக உயரும் என கணிப்பு
2026-27 நிதியாண்டில் மின்சார இரு சக்கர வாகனங்கள் 13%க்கும் அதிகமான சந்தைப் பங்கைக் கொண்டிருக்கும் என முதலீட்டு வங்கி நிறுவனமான ஜெஃப்ரீஸ் கணித்துள்ளது. இரு சக்கர வாகன விற்பனையில் எலக்ட்ரிக் வாகனங்களின் பங்கு 2020-21இல் 0.4%ஆக இருந்து 2023இன் தொடக்கத்தில் 5.4%ஆக அதிகரித்துள்ளது. மேலும், மார்ச் 2024இல் முடிவடைந்த நிதியாண்டில் மின்சார இரு சக்கர வாகன துறையின் பங்கு 5% ஆக இருந்தது. இந்த குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கு அதிகரித்த மானியங்கள் மற்றும் புதிய தயாரிப்பு வெளியீடுகள் காரணமாகும். நிதியாண்டு 2023-24 இல் 0.9 மில்லியன் யூனிட்களாக இருந்த விற்பனை அடுத்தடுத்த நிதியாண்டுகளில் முறையே 1.4 மில்லியன், 2.3 மில்லியன் மற்றும் 3.4 மில்லியன் யூனிட்கள் என சீராக உயரும் என்று ஜெஃப்ரீஸ் கணித்துள்ளது.
எலக்ட்ரிக் இரு சக்கர வாகன சந்தையில் ஓலாவின் ஆதிக்கம்
இந்தியாவின் இரு சக்கர மின்சார வாகன சந்தையில் முன்னணி உற்பத்தியாளரான ஓலா எலக்ட்ரிக் 2022-23 நிதியாண்டில் 21% கொண்டிருந்த நிலையில், 2023-24 நிதியாண்டில் 35% ஆகவும், 2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டில் 49% ஆகவும் உயர்ந்துள்ளது. இருப்பினும், ஓலாவின் சந்தைப் பங்கு ஆகஸ்ட் மாதத்தில் 31% ஆகவும், செப்டம்பரில் தற்போதுவரை வெறும் 29% ஆகவும் சரிந்துள்ளதாக ஜெஃப்ரீஸ் தெரிவிக்கிறது. பஜாஜ் ஆட்டோ, டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் மற்றும் ஏதர் எனர்ஜி போன்ற போட்டியாளர்கள் ஜூன் காலாண்டில் இருந்து தலா 5-9% புள்ளிகள் வரை பெற்றுள்ளனர். இதற்கிடையே, நாட்டில் மின்சார வாகன சந்தையை மேம்படுத்துவதற்காக ₹10,900 கோடி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.