சரிவைச் சந்தித்து வரும் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனை, புதிய அறிக்கை
எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியம் குறைக்கப்பட்டதன் காரணமாக, இந்தியாவில் அதன் விற்பனையும் தொடர்ந்து குறைந்து வருவதாகத் தங்களுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது கேர் ரேட்டிங் நிறுவனம். இந்தியாவில் மக்களிடம் எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கத்துடன் 2015-ம் ஆண்டு முதல் FAME மானியத்தை வழங்கத் தொடங்கியது மத்திய அரசு. முதலில் ரூ.75 கோடி மதிப்பீட்டிலேயே இந்த மானியம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. பின்னர், 2020-ம் ஆண்டு FAME-II திட்டத்தின் கீழ் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மானியத்தை வழங்கத் தொடங்கிய மத்திய அரசு, அதன் மதிப்பீட்டையும் ரூ.10,000 கோடி என்ற அளவிற்கு அதிரடியாக உயர்த்தியது. முதலில் 2022 மார்ச் வரை அறிவிக்கப்பட்ட இந்த மானியத் திட்டம், பின்னர் 2024 மார்ச் வரை நீட்டிக்கப்பட்டது.
குறைக்கப்பட்ட மானியம்:
ஜூன் 2021-ல் kWh-க்கு ரூ.10,000 என்ற அளவிலிருந்து ரூ.15,000 ஆகவும் மானியத்தை உயர்த்தியது மத்திய அரசு. ஆனால், நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில், பல எலெக்ட்ரிக் வாகன நிறுவனங்கள் மானியத்தைப் பெறுவதற்காக விதிமுறைகளை பின்பற்றாமல் விற்பனையை மேற்கொண்டு வருவது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அந்நிறுவனங்களின் மானியத்தை நிறுத்தி வைத்ததுடன், மீண்டும் kWh-க்கு ரூ.10,000 என்ற அளவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மானியத்தைக் குறைத்து மத்திய அரசு. எனவே, கடந்தாண்டு வரை நல்ல வளர்ச்சி கண்டுவந்த எலெக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனை, தற்போது கடும் சரிவைச் சந்தித்து வருவாதகத் தங்களுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது கேர் ரேட்டிங். எலெக்ட்ரிக் வாகனங்களின் விலையைக் குறைக்க தற்போது நிறுவனங்கள் தான் புதிய தொழில்நுட்பங்களையும், வழிமுறைகளையும் அமல்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன.