2024-ல் இந்தியாவில் வெளியாகவிருக்கும் எலெக்ட்ரிக் பைக் மற்றும் ஸ்கூட்டர்கள்
செய்தி முன்னோட்டம்
2023-ல் புதிய எலெக்ட்ரிக் பைக் மற்றும் ஸ்கூட்டர்களின் அறிமுகங்களைத் தொடர்ந்து, 2024ம் ஆண்டிலும் பல்வேறு நிறுவனங்கள் புதிய எலெக்ட்ரிக் பைக் மற்றும் ஸ்கூட்டர்களின் வெளியீட்டிற்குத் தயாராகி வருகின்றன.
அப்படி 2024-ல் வெளியாகவிருக்கும் எலெக்ட்ரிக் பைக் மற்றும் ஸ்கூட்டர்கள் என்னென்ன? பார்க்கலாம்.
பெர்ஃபாமன்ஸை முதன்மையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட 450 ஏபெக்ஸ் மாடல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை 2024லேயே வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது ஏத்தர் எனர்ஜி நிறுவனம். ஜனவரியில் இதன் வெளியீட்டையும், அதனைத் தொடர்ந்து மார்ச்சில் டெலிவரிக்களையும் தொடங்கத் திட்டமிட்டிருக்கிறது ஏத்தர்.
தங்களுடைய ஹை-எண்டு NXG எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை 2024ன் தொடக்கத்திலேயே வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது ஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனம். ரூ.1.5 லட்சத்திற்குள்ளான விலையில் இந்தப் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அந்நிறுவனம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
புதிய எலெக்ட்ரிக் பைக் மற்றும் ஸ்கூட்டர்கள்:
'ப்ராஜக்ட் வித்யுத்' திட்டத்தின் மூலம் இந்திய எலெக்ட்ரிக் டூ-வீலர் வாகன சந்தையில் கால்பதிக்கத் திட்டமிட்டிருக்கிறது ஹோண்டா. 2024-ன் இடைப்பகுதியில் தங்களுடைய முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்.
தற்போது வரை இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனை செய்து வந்த ஓலா நிறுவனம், 2024-ல் M1 என்ற தங்களுடைய முதல் எலெக்ட்ரிக் பைக்கை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது. சமீபத்தில் தான் இதன் கான்செப்ட் மாடலை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் பைக்குகளை விற்பனை செய்து வரும் புனேவைச் சேர்ந்த டார்க் நிறுவனம், 2024-ல் 'டார்க் கிராட்டோஸ் X' என்ற தங்களுடைய புதிய எலெக்ட்ரிக் பைக்கை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது.