ரூ.7.99 லட்சம் ஆரம்ப விலையில் பசால்ட் கூபே-எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்கியது சிட்ரோயன்
பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனமான சிட்ரோயன், அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கூபே-எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பசால்ட் கூபே-எஸ்யூவி ஆனது டாடா கர்வ் எஸ்யூவி அறிமுகப்படுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் கூபே ஸ்டைலிங்கும் உள்ளது. ரூ.7.99 லட்சம் எக்ஸ்-ஷோரூம் ஆரம்ப விலையில் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 31ஆம் தேதிக்கு முன் முன்பதிவு செய்யும் அனைவருக்கும் இந்த அறிமுக விலை பொருந்தும். எனினும், சிட்ரோயன் பசால்ட்டின் ஆரம்ப விலையை மட்டுமே வெளியிட்டுள்ளது. மேலும், அதில் சேர்க்கப்படும் கூடுதல் அம்சங்களைப் பொறுத்து முழு விலை பட்டியல் வரும் நாட்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிட்ரோயன் பசால்ட் வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்கள்
பசால்ட் கூபே-எஸ்யூவி ஒரு தனித்துவமான சாய்வான கூரை, புதிய அலாய் வீல்கள், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட எல்இடி டெயில் விளக்குகள் மற்றும் ஒரு டூயல்-டோன் பின்புற பம்பர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் கூடிய 10.2 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆட்டோ க்ளைமேட் கன்ட்ரோல், 16 இன்ச் டைமண்ட்-கட் அலாய் வீல்கள் மற்றும் ரியர் ஏசி வென்ட்கள் ஆகியவை சலுகையில் உள்ளன. பாதுகாப்புக்காக ஆறு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், பின்புற பார்க்கிங் கேமரா மற்றும் டயர் பிரஷர் கண்காணிப்பு அமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பசால்ட் இரண்டு 1.2-லிட்டர் பெட்ரோல் எஞ்சின்களைக் கொண்டு இயக்கப்படுகிறது.