சுங்கச்சாவடி அருகே வீடு உள்ளவர்களுக்கு புதிய சலுகைக் கட்டண பாஸ்: நவம்பர் 1 முதல் அமல்
செய்தி முன்னோட்டம்
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் இருந்து 20 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் வசிக்கும் வர்த்தக நோக்கமற்ற சொந்த வாகன உரிமையாளர்களுக்கு புதிய சலுகை அடிப்படையிலான வருடாந்திர பாஸ் திட்டத்தை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இப்புதிய விதிகள் 2026 நவம்பர் 1 முதல் அமலுக்கு வருகின்றன. சுங்கச்சாவடியிலிருந்து 20 கி.மீ சுற்றளவுக்குள் வசிக்கும் உள்ளூர்வாசிகளுக்கு மட்டுமே இச்சலுகை பொருந்தும். Non-commercial சொந்த வாகனங்கள் மற்றும் சரியாக இயங்கும் செல்லுபடியாகும் ஃபாஸ்டேக் வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகும். இந்த பாஸ் வழங்கப்பட்ட குறிப்பிட்ட ஒரு சுங்கச்சாவடிக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
விவரங்கள்
கட்டண விவரங்கள் மற்றும் சலுகை தொகைகள்
சுங்கச்சாவடி அமைந்துள்ள இடத்தை அடிப்படையாகக் கொண்டு இரு வேறு கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
1. உள்ளாட்சி அல்லது நகராட்சி எல்லைக்கு வெளியே அமைந்த சுங்கச்சாவடிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 1,500 கட்டணம்.
2. நகராட்சி அல்லது உள்ளாட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அமைந்த சுங்கச்சாவடிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 3,000 கட்டணம்.
விலக்கு
யாருக்கெல்லாம் இச்சலுகை கிடையாது?
அனைத்து உள்ளூர்வாசிகளுக்கும் இச்சலுகை தானாகக் கிடைத்துவிடாது என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
மூடிய பயன்பாட்டுக் கட்டண முறை மூலம் இயங்கும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளுக்கு இத்திட்டம் பொருந்தாது.
மாற்றுப் பாதை அல்லது சர்வீஸ் சாலைகள் பயன்பாட்டில் இருக்கும் சுங்கச்சாவடிகளில் இந்த பாஸ் வழங்கப்பட மாட்டாது.
இத்திட்டம் வரும் நவம்பர் 1 முதல் தகுதியான சுங்கச்சாவடிகளிலும், டிசம்பர் 1 முதல் 'ராஜ்மார்க் யாத்ரா' செயலியிலும் பயன்பாட்டிற்கு வரும்.