காரை வெயிலில் நிறுத்திட்டு உடனே ஏசி போடுறீங்களா? கேபினுக்குள் உருவாகும் உயிர்க்கொல்லி நச்சு வாயு; தப்பிக்கும் 5 எளிய வழிகள்
செய்தி முன்னோட்டம்
கோடைகாலத்திலோ அல்லது சாதாரண வெயில் நேரத்திலோ காரை நீண்ட நேரம் நிழலில்லாமல் வெயிலில் நிறுத்துவது நாம் அனைவரும் செய்யும் ஒரு சாதாரண செயல்தான். ஆனால், அப்படி நிறுத்தப்படும் காரின் கதவுகளைத் திறந்து உள்ளே சென்று அமரும்போது, நாம் அறியாமலேயே ஒரு ஆபத்தான நச்சு வாயுவை சுவாசிக்கிறோம் என்பது பலருக்கும் தெரியாது. காரின் பிளாஸ்டிக் பாகங்கள், இருக்கைகள் மற்றும் ஏசி அமைப்புகள் அதிக வெப்பத்தால் சூடேறும்போது பென்சீன் என்ற அபாயகரமான நச்சு வாயு கேபினுக்குள் அளவுக்கு அதிகமாக வெளியாகிறது.
நச்சு வாயு
கேபினுக்குள் உருவாகும் பென்சீன் நச்சு வாயுவின் ஆபத்துக்கள்
சாதாரண சூழலில் ஒரு காரில் 400 முதல் 800 மிகி வரை பென்சீன் வாயு இருக்கலாம்.
ஆனால், 60 டிகிரி ஃபாரன்ஹீட்டிற்கும் அதிகமான வெப்பத்தில் காரை வெயிலில் நிறுத்தும்போது, இந்த வாயுவின் அளவு 2,000 முதல் 4,000 மிகி வரை அதாவது அனுமதிக்கப்பட்ட அளவை விட 40 மடங்கு வரை அதிகரிக்கிறது.
இந்த வாயுவை தொடர்ச்சியாக சுவாசிப்பது புற்றுநோய், எலும்பு மஜ்ஜை பாதிப்பு, இரத்த சோகை மற்றும் கல்லீரல் பாதிப்பு போன்ற கடுமையான உடல்நலக் கோளாறுகளை உண்டாக்கும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
காற்று வெளியேற்றம்
வெயிலில் இருந்து தப்பிக்கும் வழிமுறைகள் மற்றும் காற்று வெளியேற்றம்
வெயிலில் நின்ற காரைத் திறந்தவுடனேயே கண்ணாடிகளை மூடிக் கொண்டு ஏசியை போடுவது மிகத் தவறான பழக்கமாகும்.
காரைத் திறந்ததும் முதலில் அனைத்துக் கண்ணாடிகளையும் கீழே இறக்கிவிட்டு, காரின் கதவுகளை சிலமுறை திறந்து மூடுவதன் மூலம் உள்ளே தேங்கியுள்ள நச்சு வாயுவை வெளியேற்ற வேண்டும்.
அதன் பிறகே காரை ஸ்டார்ட் செய்து, ஏசியை ஃப்ரெஷ் ஏர் முறையில் ஓடவிட வேண்டும்.
சில நிமிடங்கள் கழித்து வாயு முழுமையாக வெளியேறிய பின்னரே கண்ணாடிகளை மூடி பயணத்தைத் தொடர வேண்டும்.
கார் பராமரிப்பு
காரை பாதுகாப்பாக பராமரிக்கும் எளிய வழிமுறைகள்
முடிந்தவரை காரை மரங்களின் நிழலிலோ அல்லது மூடப்பட்ட பார்க்கிங் பகுதிகளிலோ நிறுத்துவது சிறந்தது.
வேறு வழியின்றி வெயிலில் நிறுத்த நேரிட்டால், காரின் கண்ணாடிகளில் சன் ஷேட்ஸ் பயன்படுத்துவது கேபினின் வெப்பநிலையை கணிசமாகக் குறைக்கும்.
மேலும், கண்ணாடிகளை முழுமையாக மூடாமல் ஒரு மில்லிமீட்டர் அளவிற்கு லேசான இடைவெளி விட்டு நிறுத்துவது உள்ளே சூடான காற்று தேங்குவதைத் தடுக்கும்.
இந்த சிறிய விழிப்புணர்வுப் பழக்கங்கள் உங்கள் காரையும் குடும்பத்தின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பாக வைத்திருக்கும்.