பெட்ரோலைத் தொடர்ந்து சிஎன்ஜியிலும் அதிரடி; விவசாயிகளுக்கு வருமானம், வாகன ஓட்டிகளுக்கு லாபம்; பட்ஜெட்டில் பசுமை எரிசக்திப் புரட்சி
செய்தி முன்னோட்டம்
பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கும் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பட்ஜெட் 2026 இல் சிஎன்ஜி மற்றும் வீடுகளுக்கு வழங்கப்படும் பிஎன்ஜி எரிவாயுவில் படிப்படியாக சிபிஜி என்ப்படும் அழுத்தப்பட்ட உயிரியல் எரிவாயுவை (Compressed Bio-Gas) கலக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. விவசாயக் கழிவுகளில் இருந்து இந்த பயோ-கேஸ் தயாரிக்கப்படுவதால், விவசாயிகளுக்குத் தங்களின் கழிவுகளை விற்பனை செய்வதன் மூலம் கூடுதல் வருமானம் கிடைக்கும். இந்தத் திட்டம் கார்பன் உமிழ்வைக் குறைப்பதோடு, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இயற்கை எரிவாயுவின் தேவையையும் பெருமளவு குறைக்கும். பயோ-கேஸ் கலக்கப்பட்ட சிஎன்ஜி மீதான மத்திய கலால் வரியைக் கணக்கிடும்போது, பயோ-கேஸின் மதிப்பிற்கு முழு வரி விலக்கு அளிக்க நிதியமைச்சர் முன்மொழிந்துள்ளார்.
மின்சார வாகனம்
மின்சார வாகன உள்கட்டமைப்பு மேம்பாடு
மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும், அவற்றுக்கான சார்ஜிங் நிலையங்களை அதிகப்படுத்தவும் பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன: பொதுப் போக்குவரத்தில் மின்சாரப் பேருந்துகளை அதிகரிக்க, மாநிலப் போக்குவரத்துக் கழகங்களுக்கு நிதி பாதுகாப்பு வழங்கும் புதிய 'Payment Security Framework' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும், குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் 4,000 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும். நெடுஞ்சாலைகள் மற்றும் நகரங்களில் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யும் வசதிகளை மேம்படுத்த தனியார் முதலீடுகளுக்குப் பெரும் ஊக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பேட்டரி
பேட்டரி விலை குறைய வாய்ப்பு
மின்சார வாகனங்களின் இதயமாக விளங்கும் பேட்டரிகளின் விலையைக் குறைக்க, அவற்றின் உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்கள் மீதான வரி நீக்கப்பட்டுள்ளது. லித்தியம்-அயன் பேட்டரி தயாரிப்பிற்குத் தேவையான கோபால்ட், லித்தியம், லெட், துத்தநாகம் மற்றும் 12க்கும் மேற்பட்ட முக்கிய தாதுக்களுக்கு அடிப்படை சுங்க வரியிலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பேட்டரி தயாரிப்பிற்குத் தேவையான 35 கூடுதல் மூலதனப் பொருட்களுக்கு வரி விலக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உள்நாட்டிலேயே பேட்டரி உற்பத்தி அதிகரித்து, மின்சார வாகனங்களின் விலை குறைய வாய்ப்புள்ளது.
வரி விலக்கு
விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு வரி விலக்கு
ஒரு மனிதாபிமான நடவடிக்கையாக, மோட்டார் விபத்து இழப்பீட்டுத் தீர்ப்பாயம் (MACT) மூலம் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை மற்றும் அதற்கான வட்டிக்கு இனி வருமான வரி கிடையாது. மேலும் இதற்கு வரிப் பிடித்தமும் (TDS) செய்யப்பட மாட்டாது என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.